NATIONAL

புதிய மக்கள் பிரதிநிதி கோல குபு பாரு தொகுதியை மேலும் மேம்படுத்துவார்- வாக்காளர்கள் எதிர்பார்ப்பு

உலு சிலாங்கூர், மே 3- கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் தொடர்வதற்கு ஏதுவாக பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் தினமான மே 11ஆம் தேதியை தொகுதி வாக்காளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தனது கடமைகளை சிறப்பாக ஆற்றி வந்துள்ளதோடு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினரும் அவ்வாறே செய்வார் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அரசு ஊழியரான ரம்லி ஆசோம் (வயது 59) கூறினார்.

லீ கீ ஹியோங் போல் நல்ல உள்ளம் படைத்த சட்டமன்ற உறுப்பினரை நான் எதிர்பார்க்கிறேன். நாங்கள் அவரை பெரிதும் நேசித்தோம். அவர் எங்களை ஒருபோதும் வேறுபடுத்திப் பார்த்ததில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பல மேம்பாடுகளையும் சமூக நல உதவிகளையும் நாங்கள் பெற்றுள்ளோம். ஆகவே நான் மறைந்த லீ போன்ற சிறந்த வேட்பாளருக்கு வாக்களிப்பேன் என சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

கோல குபு பாரு தொகுதி பல்வேறு துறைகளில் குறிப்பாக அடிப்படை வசதி, போக்குவரத்து மற்றும் இணைய அடைவு நிலை ஆகியவற்றில் இன்னும் மேம்பாடு காண வேண்டியுள்ளது என அவர் சொன்னார்.

இதனிடையே, தம்மைப் போன்ற வசதி குறைந்தவர்களுக்கு உதவிக் கூடிய திட்டங்களை அமல்படுத்துவதில் பதிதாக தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் முக்கியத்தும் அளிப்பார் எனத் தாம் நம்புவதாக தனித்து வாழும் தாயான சித்தி பாத்திமா புல்கானி (வயது 38) கூறினார்.

என்னைப் போன்ற தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், ஆதரவற்றோருக்கு உதவக்கூடிய வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக நான் மறவாமல் வாக்களிக்கச் செல்வேன் என்று அவர்  தெரிவித்தார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சுயேச்சை வேட்பாளர் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் எதிர்வரும் மே 11ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :