NATIONAL

மத்திய அரசைப் பின்பற்றி சிலாங்கூரில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு

ஷா ஆலம், மே 3- மத்திய அரசாங்கம் அமல் படுத்தியதைப் போல் சிலாங்கூர் அரசும் மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 13 விழுக்காட்டு சம்பள உயர்வை அமல்படுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த சம்பள உயர்வைத் தொடர்ந்து தற்போது உள்ள நிதி நடைமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மத்திய அரசின் சம்பள உயர்வை அது பரிசீலனைக்கு உட்படுத்தும் என்று அவர் சொன்னார்.

சம்பள உயர்வு (மாநில அரசு ஊழியர்களுக்கு) நிச்சயம் அமல்படுத்தப்படும். பிரதமர் அறிவித்தது போல் அந்த சம்பள உயர்வு குறைந்த பட்சம் 13 விழுக்காட்டிலிருந்து தொடங்கும். இதன் தொடர்பான விரிவான விபரங்களை வரும் டிசம்பர் மாதம் அறிவிப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட உடன் நாங்கள் சம்பள முறையை மறு ஆய்வு செய்வோம். இதுவரை சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை என்று அவர் சொன்னார்.

மாநில அளவில் அமல்படுத்தப்படும் சம்பள உயர்வு பொதுச் சேவை ஊழியர்கள் தங்கள் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குரிய தூண்டுகோலாக விளங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் மக்களின் வருமானம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பிரதமர் அறிவித்த அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை தனியார் துறையினரும் வரவேற்க வேண்டும் என அமிருடின் கூறினார்.

இதன் மூலம் இந்த பிராந்தியத்தில் உயர் வருமானம் கொண்ட நாடாக மலேசியாவை மாற்ற முடியும். உலகில், குறிப்பாக வளர்ந்த நாடுகள் மத்தியில் நிலவும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பையும் அதன் வழி சமாளிக்க இயலும் என்றார் அவர்.

அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 13 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த மே 1ஆம் தேதி அறிவித்தார். 1,000 கோடி வெள்ளிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த சம்பள உயர்வு வரும் டிசம்பர் மாதம் அமலுக்கு வரும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :