ANTARABANGSA

மேற்கு சுமத்ராவில் வெள்ளம்- இறந்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு, 20 பேரைக் காணவில்லை

ஜகார்த்தா, மே 16 – இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்தில் வார இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள்  தெரிவித்தனர்.

காணாமல் போனதாக முன்னதாக  அறிவிக்கப்பட்ட 25 பேரில் ஐவர்  இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர். இதனுடன் மரண எண்ணிக்கை  62 பேராக அதிகரித்துள்ளதாக  தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 4,000 க்கும் மேற்பட்டவர்கள்  அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடர் காரணமாக குறைந்தது 521 வீடுகள், நெற்பயிர்களை உட்படுத்திய  31,985 ஹெக்டர் நிலம், 19 பாலங்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான   சாலைகள் சேதமடைந்துள்ளன.

வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் உள்ள பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று பேரிடர் ளேலாண்மைப் பிரிவுத்  தலைவர் சுஹரியான்தோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த பேரிடரில் உயிர் பிழைத்தவர்களில்  எத்தனை பேர் இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும்  என்பது பற்றிய தரவுகளை சேகரித்து புதிய வீடுகளை கட்டுவதற்கு பாதுகாப்பான பகுதிகளை பேரிடர் மேலாண்மைப் பிரிவும்  மேற்கு சுமத்ரா அரசாங்கமும் தேடி வருகின்றன.

அரசாங்கம் நிலத்தை வழங்கி வீடுகளையும்  கட்டும் என்றும்  ஆறு மாதங்களுக்குள் புதிய வீடுகள் தயாராகிவிடும் என்றும் சுஹரியான்தோ கூறினார்.

இந்தப் பேரழிவு கடந்த  சனிக்கிழமை மாலை இப்பகுதியைத் தாக்கியது. கனமழையால் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் குளிர்ந்த எரிமலைக் குழம்பு – எரிமலை சாம்பல், பாறைகள்,  நீர், சகதி  ஆகியவற்றின் கலவை பெருக்கெடுத்ததால்  மூன்று மாவட்டங்களும் ஒரு நகரமும் பாதிக்கப்பட்டுள்ளன.


Pengarang :