NATIONAL

செமினியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலையில் தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டது

ஷா ஆலம், மே 17- நிலச் சரிவினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட செமினி, ஜாலான் சுங்கை லாலாங்கில் பெய்லி எனப்படும்  தற்காலிகப் பாலம் அமைக்கும் பணி முற்று பெற்றுள்ளது.

இந்த தற்காலிகப் பாலம் போக்குவரத்து திறக்கப்பட்டுள்ள வேளையில் இலகு ரக வாகனங்களில் இதில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

இந்த தற்காலிக பாலத்தை பொருத்தும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இன்ஃப்ராசெல் மற்றும் உலு லங்காட் மாவட்ட பொதுப்பணித் துறையின் ஒத்துழைப்பின் மூலம் இது சாத்தியமானது என அந்நிறுவனம் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது.

அந்த பாலம் இன்று காலை தொடங்கி இலகு ரக வாகனங்களுக்குத் திறக்கப் பட்டுள்ளதாக அந்த அரசு சார்பு நிறுவனம் குறிப்பிட்டது.

இந்த பாலம் நிர்மாணிப்பு அடுத்த வாரம் முற்றுப்பெறும் என தொடக்கத்தில் கணிக்கப்பட்ட நிலையில் அது முன்கூட்டியே தயாராகி விட்டதாக அடிப்படை வசதி மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிஷாம் ஹஷிம் கூறினார்.

தற்காலிக அடிப்படையில் இந்த பாலம் நிர்மாணிக்கப் பட்டதாகக்  கூறிய அவர், ஈராண்டு காலத்தில் நிரந்தர பாலத்தை அமைப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

நிலச் சரிவின் காரணமாக ஜாலான் சுங்கை லாலாங்கின் இரு மருங்கிலும் போக்குவரத்து தடை பட்டதைத் தொடர்ந்து அங்கு தற்காலிகப் பாலம் நிறுவப்பட்டது.


Pengarang :