ANTARABANGSAPENDIDIKAN

மலேசியர்களுக்கு திவேட் பயிற்சிகளை வழங்க ஹாங்காங் ஆர்வம்- துணைப் பிரதமர் தகவல்

ஹாங்காங், மே 24- இரு தரப்பு நன்மைக்காக தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் (திவேட்) துறையிலும் பொருளாதாரத்திலும் ஒத்துழைப்பை நல்க மலேசியாவும் ஹாங்காங்கும் இணக்கம் கண்டுள்ளன.

நேற்று இங்கு ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தின் நிர்வாகத் தலைவர் ஜோன் லீ கா சியூவுடன் நடத்திய சந்திப்பின் போது இந்த இணக்கம் காணப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

துணைப் பிரதமராக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றப் பின்னர் சீனாவுக்கு அதிகாரப்பூர் வருகையை கிராம மற்றும் வட்டார  மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அவர் மேற்கொண்டுள்ளார்.

சீன துணையதிபர் டிங் ஷிஹூஷியாங்கின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு வருகை மேற்கொண்டுள்ள அவர், இம்மாதம் 22 முதல் ஜூன் 1 வரை அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கு கொள்வார்.

ஹாங்காங்கில் பல பல் திறன் தொழில் கல்வி நிலையங்களும் திவேட் பயிற்சி மையங்கள் மிகவும் வெற்றிகரமான முறையில் நடைபெற்று வருகின்றன. நம் நாட்டில் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதன் மூலம் நமது பயிற்றுநர்கள் ஹாங்காங்கிற்கு அனுப்பப்பட்டு பயிற்சி வழங்கப்படும் என மலேசிய செய்தியாளர்களிடம் ஜாஹிட் கூறினார்.

தற்போது சுமார் 500 மாணவர்கள் ஹாங்காங்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். அவர்களில் 95 விழுக்காட்டினர் உபகாரச் சம்பளம் பெறும் மாணவர்களாவர்.

ஹாங்காங் சார்பில் மலேசியாவில் வர்த்தக மற்றும் பொருளாதார அலுவலகத்தை அமைப்பது மற்றும் பங்குச் சந்தையில் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரிவின் நிதி நிர்வாகிகளின் பங்கேற்பை அதிகரிப்பது குறித்தும் தாங்கள் விவாதித்ததாக அவர் சொன்னார்.


Pengarang :