NATIONAL

பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம்- அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயினுக்கு பிரதமர் பாராட்டு

கோலாலம்பூர், மே 24- பாலஸ்தீன விவகாரத்தில் வரலாறு, மனிதாபிமானம் மற்றும் நீதியின் பக்கம் இருக்கும் அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் நேற்று கூறியதைப் போல் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதற்கான நோக்கம் சுய உரிமை, இறையாண்மை மற்றும் கௌரவத்தை தற்காத்துக் கொள்வதில் பாலஸ்தீன மக்களுக்கு உள்ள உரிமையைத் அங்கீகரிக்கும் வகையில் உள்ளது என்று அன்வார் சொன்னார்.

மத்திய கிழக்கில் அமைதியை காண்பதற்கான முயற்சியில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல்லாக  விளங்குகிறது.  அவ்வாறு செய்யாத மற்ற அரசுகளும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். பாலஸ்தீன போராட்டத்திற்கு உலகம் ஒன்று திரள்கிறது. நீதிக்கான அவர்களின் போராட்டம் மறுக்கப்படாது.

வரலாற்றின் போக்கைச் சரி செய்வதில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில் அவர் சொன்னார்.

வரும் மே 28 ஆம் தேதி தொடங்கி தாங்கள் பாலஸ்தீன நாட்டை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப் போவதாக  அந்த மூன்று நாடுகளும் அறிவித்ததாக அனைத்துலக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளில் 143 நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளதாக அல் ஜஸிரா தொலைக்காட்சி கூறியது.


Pengarang :