People move with their belongings to the cyclone shelter before Cyclone Remal hits the country in the Shyamnagar area of Satkhira, Bangladesh, May 26, 2024. REUTERS/Mohammad Ponir Hossain
SELANGOR

வங்காளதேசத்தில் பலத்த சூறாவளி – 800,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

டாக்கா, மே 27 – வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட வெப்பமண்டல சூறாவளி நாட்டின் தென் கடற்கரை வழியாக கரையை கடக்கும் நிலையில் வங்கதேசத்தில் உள்ள  லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

வங்காளதேசத்தின் தென் பகுதி மாவட்டமான கெபுபாராவிலும் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் உள்ளூர் நேரப்படி இரவு 8.00 மணியளவில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது என்று டாக்காவில் நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் வானிலை ஆய்வாளர் ஷமிம் அஹ்சன் கூறியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) குறிப்பிட்டது.

ரெமல் என்று பெயரிடப்பட்ட புயல் கரையோரப் பகுதியில்  மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது. மேலும் புயல் கடற்கரையை கடக்க இரண்டு மணி நேரம் ஆகலாம் என்று அவர் கூறினார்.

முன்னதாக,  800,000 க்கும் மேற்பட்ட கரையோர குடியிருப்பாளர்களை அரசாங்கம்  சூறாவளி நிவாரண  முகாம்களுக்கு வெளியேற்றியதாக  வங்காளதேச ஜூனியர்  அமைச்சர் ஒருவர் கூறினார்.

கடலோரப் பகுதிகளில் உள்ள மற்ற மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்  என்று பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணங்களுக்கான மாநில அமைச்சர் முஹிபுர் ரஹ்மான் சூறாவளி தயார் நிலை தொடர்பான  கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்தார்.

தெற்கு துறைமுக நகரமான சட்டோகிராமில் உள்ள ஷா அமனாத் அனைத்துலக விமான நிலையத்தில் அனைத்து விமானச் சேவைகளையும் வங்களாதேசத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம்   நிறுத்தியுள்ளது.

வானிலை சீராகும் பட்சத்தில் இன்று  திங்கட்கிழமை காலை விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று சட்டோகிராமில் உள்ள விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தி அதிகாரி இப்ராஹிம் கலீல் தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் உருவாகும் தீவிர  வெப்பமண்டல சூறாவளியால்  வங்காளதேச கடற்கரை அடிக்கடி தாக்கப்படுகிறது.

கடந்த 1965ஆம் ஆண்டு முதல் வங்காளதேச கடற்கரையைத் தாக்கிய 12 பெரிய சூறாவளிகளில் 450,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக  பேரிடர் மேலாண்மை தயார் நிலை குறித்து வங்காளதேசத்தின் 2016ஆம் ஆண்டு  அறிக்கை கூறுகிறது.


Pengarang :