NATIONAL

ராஃபா மீதான தாக்குதலின் எதிரொலி- காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் குறைந்து வருகின்றன

கோலாலம்பூர், மே 31- ராஃபா மீதான தாக்குதலை இஸ்ரேலிய படைகள் கடந்த மே 7ஆம் தேதி தொடங்கியது முதல் காஸா தீபகற்பத்திற்கு வரும் மனிதாபிமான உதவிப் பொருட்களின் அளவு 67 விழுக்காடு குறைந்து விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியது.

காஸா பகுதியில் நுழையும் உணவு மற்றும் இதர உதவிப் பொருட்களின் அளவு அங்கு அதிகரித்துவரும் தேவையை ஈடு செய்யக்கூடிய வகையில் இல்லை. கடந்த மே 7ஆம் தேதி தாக்குதல் தொடங்கியதிலிருந்து அப்பகுதிக்கான உதவிப் பொருள் வரத்து மிகவும் குறைந்து விட்டது. கடந்த மே 7 மற்றும் 28ஆம் தேதிக்கு இடையே தினசரி உதவிப் பொருள்கள்  ஏற்றிய 58 டிரக்குகள் மட்டுமே வரும் வேளையில் கடந்த ஏப்ரல் 1 முதல் மே 6 வரை டிரக்குகளின் எண்ணிக்கை தினமும் சராசரி 176ஆக இருந்தது.

தனியார் துறையினரால் விநியோகிக்கப்படும் பொருட்கள் மற்றும் எரிபொருள் இதில் அடங்கவில்லை என்று கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட மேற்கு கரை தொடர்பான சமீபத்திய அறிக்கை கூறியது.

அமெரிக்க இராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக படகுத்துறை மோசமான வானிலை காரணமாக பழுதடைந்ததை தொடர்ந்து அந்த படகுத் துறை வழியாக கடந்த மே 27 மற்றும் 28ஆம் தேதிகளில் எந்த உதவிப் பொருளும் வரவில்லை என்று அந்த ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்தது.

கடந்த மே 17ஆம் தேதி அந்த  தற்காலிக படகுத் துறை அமைக்கப்பட்டது முதல் உணவுப் பொருள்கள் ஏற்றிய 137 டிரக்குகள் அதனைப் பயன்படுத்தின.

கடுமையான போர் மற்றும் காஸாவுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உதவிகளை பெறுவதிலும் தடை ஏற்பட்டுள்ளது.

காஸாவில் மருந்துகளின் கையிருப்பு வரம்புக்குற்பட்டதாக உள்ளதால் பொது மக்களுக்கு சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை கூறியது.


Pengarang :