ANTARABANGSA

போலி ஆவண வழக்கில் டோனால்ட் டிரம்ப் குற்றவாளியே- அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

நியு யார்க், மே 31- போலி ஆவண வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர்  டோனால்ட் டிரம்ப் குற்றவாளியே  என நியு யார்க் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் ஆபாசப் பட நடிகையை அமைதிப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட தொகையை மூடி மறைப்பதற்காக போலியான ஆவணங்களை தயாரித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.

இந்த தீர்ப்பின் வழி நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முதலாவது அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் விளங்குகிறார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு டிரம்பிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியே என 12 பேரடங்கிய ஜூரிகள் குழு ‘தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வாசிக்க பட்டவுடன்  தனக்கு எதிரான இந்த தீர்ப்பை ஏகமனதாக வழங்கிய ஜூரிகளை  டிரம்ப் மிகுந்த ஏமாற்றத்துடன் பார்த்தார்.

குற்றவாளி என நிரூபிக்கப் பட்ட  டிரம்பிற்கு வரும் ஜூலை 11ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி ஜூவான் மெர்க்கன் அறிவித்தார். வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும்  அமெரிக்கத் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டிரம்ப்பின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப் படவுள்ளது.

போலி பத்திரத் தயாரிப்பு தொடர்பான குற்றங்களுக்கு கூடுதல் பட்சம்  நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பெரும்பாலும் இத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை அல்லது அபராதம் அல்லது நன்னடத்தை ஜாமீன் வழங்கப்படும் என்பதால் இந்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனை  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கும் தேர்தலில் வென்றால் பதவியை ஏற்பதற்கும் டிரம்பிற்கு  தடையாக இருக்காது.


Pengarang :