அனைத்துலக புத்தக விழா- பெவிலியன் சிலாங்கூருக்கு 50,000க்கும் மேற்பட்டோர் வருகை

கோலாலம்பூர், ஜூன் 3- இங்குள்ள  உலக வாணிக மையத்தில்  நடைபெறும் 2024 கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் இடம் பெற்றுள்ள பெவிலியன் சிலாங்கூர் காட்சிக்கூடத்திற்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர்.

அதிகமான வருகையாளர்களை ஈர்ப்பதற்காக மாநில அரசு நிறுவனங்களின் கண்காட்சி,  விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இந்த கண்காட்சிக் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஜப்ருல்லா அரிஸ் கூறினார்.

கால்பந்து விளையாட்டாளர் ஃபைசால் ஹலிமுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதற்காக சிலாங்கூர் எப்.சி. கால்பந்து விளையாட்டாளர்கள் இங்கு ஜெர்சிகளை விற்பனை செய்ததோடு சிலாங்கூர் யூத் கம்யூனிட்டி தொழில்முனைவோர்களும் தங்கள் தயாரிப்பு பொருள்களை விற்பனை செய்தனர் என்று அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டைப் போலவே இம்முறையும் இலக்கியவாதிகளுடன்ன கலந்துரையாடல் நிகழ்வுகளை தினமும் இங்கு ஏற்பாடு செய்கிறோம். அவர்கள் தங்களின் அனுபவங்கள் மற்றும் வெற்றியின் இரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குரிய தளமாக இது விளங்குகிறது என்றார் அவர்.

தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்படும் இந்த கண்காட்சிக் கூடத்தில் பல்வேறு இலக்கியவாதிகள் பங்கேற்கும் நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.

இவ்வாண்டிற்கான அனைத்துலக புத்தக கண்காட்சி இங்குள்ள உலக வாணிக மையத்தில் கடந்த மே 24ஆம் தேதி தொடங்கி ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. இங்கு திறக்கப்பட்ட 969 காட்சிக்கூடங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் புத்தக பதிப்பகத்தார் தங்களின் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.


Pengarang :