ANTARABANGSA

இந்தியாவில் வெப்ப அலைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி- 25,000 பேர் நோயினால் பாதிப்பு

புவனேஸ்வர், (இந்தியா), ஜூன் 4- இந்தியாவை வழக்கத்திற்கும் மாறாக  தகிக்கும் வெப்பம் தாக்கி வரும் வேளையில் அந்நாட்டின் சில பகுதிகள் சூறாவளி மற்றும் கடுமையான மழையை எதிர்நோக்கி வருகின்றன.

அந்நாட்டை உலுக்கி வரும் வெப்ப அலை காரணமாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வேளையில் ஆயிரக்கணக்கானோர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தலைநகர் புதுடில்லி மற்றும் அருகில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் வெப்பநிலை 50 டிகிரி செலிசியசை தாண்டியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மனிதச் செயல்களால் ஏற்பட்ட பருவநிலை மாற்றமே இந்நிலையை மோசமாக்கியுள்ளது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

கோடை காலத்தில் கிழக்கு இந்திய மாநிலமான ஓடிசாவில் குறைந்தது 30 பேர் வெப்ப பக்கவாதத்திற்கு பலியாகியுள்ளன வேளையில் மேலும் அங்கு நிகழ்ந்த 97 மரணங்களுக்கு வெப்ப பக்கவாதம் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறினர்.

கடந்த மார்ச் மாதம் முதல் மே வரையிலான கோடை காலத்தின் போது வெப்ப பக்கவாதத்தினால் சுமார் 25,000 பேர் பாதிக்கப்பட்டதாக அரசாங்க தரவுகளை மேற்கோள் காட்டி திபிரிண்ட் என்ற இணைய ஏடு கூறியது.

நாட்டில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்ற போது இந்தியாவின் தென் மற்றும் கிழக்கு மாநிலங்கள் கடுமையான வெப்ப அலையை எதிர் கொண்டன. இதன் காரணமாக டில்லியில் பலர் உயிரிழந்ததோடு நீர் விநியோகமும் ஏறக்குறைய முற்றாக முடங்கி வயல்களில் கால்நடைகளும் மடிந்தன.

இந்த வெப்பத் தாக்கத்திற்கு நேர்மாறாக கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளை கடும் மழையுடன் கூடிய ரெமால் சூறாவளித்  தாக்கியது.  இந்த பேரிடரில் வடகிழக்கு மாநிலமான அசாமில் 14 பேர் உயிரிழந்தனர்.

தென் மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கடுமையான மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டது.


Pengarang :