ANTARABANGSA

காஸாவில் போர் நிறுத்தத்தை சாத்தியமாக்கும் முயற்சிகளில் அமெரிக்கா, எகிப்து தீவிரம்

இஸ்தான்புல், ஜூன் 11 – காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த எகிப்து அதிபர் அப்டெல் ஃபாத்தா அல்-சிசி மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிராந்திய நாடுகளுக்கான பயணத்தின் முதல் நாடாக நேற்று எகிப்துக்கு வந்த பிளிங்கன், அந்நாட்டுத் தலைவரை கெய்ரோவில் சந்தித்தார்.  தொடர்ந்து அவர் ஜோர்டான் மற்றும் கத்தாருக்குச் செல்வார்.  கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் எட்டாவது பயணம் இதுவாகும்.

காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டுவதற்கான கூட்டு முயற்சிகளின் சமீபத்திய முன்னேற்றங்களை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்ததாக எகிப்திய அதிபரின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனாடோல் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான எகிப்திய முயற்சிகள் குறித்தும் இரு தலைவர்களும்  விவாதித்தனர்.

அரசியல் மற்றும் மனிதாபிமான ரீதியாக எகிப்தின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை மீட்டெடுப்பதற்கான இருதரப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு அமெரிக்க நிர்வாகத்தின்  பாராட்டுக்களை  பிளிங்கன் தெரிவித்தார்.

உடனடி போர் நிறுத்தத்தைக் கோரும்   ஐக்கிய நாடுகள் சபையின்  பாதுகாப்பு மன்றத்  தீர்மானத்திற்கு மத்தியிலும்  கடந்த அக்டோபர் 7 முதல் காஸா  மீது தொடர்ச்சியாக  மிருகத்தனமான தாக்குதலை  இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

காஸாவில் இதுவரை  37,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்கள் ஆவர்.  மேலும்  கிட்டத்தட்ட 84,700 பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Pengarang :