NATIONAL

டீசல் உதவித் தொகை சேமிப்பு பொது போக்குவரத்து, ரொக்க உதவித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்

புத்ராஜெயா, ஜூன் 11- இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகை திட்டத்தின்
மூலம் சேமிக்கப்படும் தொகை மக்கள் நலனுக்கு குறிப்பாகப் பொது
போக்குவரத்தை மேம்படுத்துவது மற்றும் ரஹ்மா ரொக்க உதவித் திட்டம்
(எஸ்.டி.ஆர்.) போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த இலக்கு மானியத் திட்டம் மக்களின் வரவேற்பை பெற்றதாக
இல்லாவிட்டாலும் இதன் மூலம் ஆண்டுக்கு 400 கோடி வெள்ளி வரை
சேமிக்க முடியும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.

அந்த சேமிப்புத் தொகை (இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகை மூலம்
கிடைக்கும் தொகை) பொது போக்குவரத்து தேவைகளை ஈடு செய்வதற்குப்
பயன்படும் என்று அவர் தெரிவித்தார்.

எஸ்.டி.ஆர். திட்டத்தின் மூலம் 90 லட்சம் பயனாளிகளுக்கு நேரடி ரொக்கத்
தொகையை வழங்க 1,000 கோடி வெள்ளி தேவைப்படுகிறது.

இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அத்தொகை
அமைச்சர்களின் அலவன்ஸ் தொகையை உயர்த்துவதற்கோ இதர
நோக்கங்களுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை என்று அவர் இன்று இங்கு
நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

தீபகற்ப மலேசியாவிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் டீசல் விலை
லிட்டர் ஒன்றுக்கு வெ.3.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தானியங்கி
விலை செயல்முறையின் படி மே மாதத்திற்கான மானியம் அல்லாத
சந்தை விலையாக இது விளங்குகிறது.

நிதியமைச்சின் நடப்பு நடைமுறைக்கேற்ப டீசல் விலை வாராந்திர
அடிப்படையில் அறிவிக்கப்படும் என்று இரண்டாவது நிதியமைச்சர்
டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா முன்னதாகக் கூறியிருந்தார்.

விலையில் நிலைத்தன்மையற்றப் போக்கு நிலவுவதை தவிர்க்க அந்த
எரிபொருள் விற்பனை மீது அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பை
மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :