NATIONAL

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் – ஒற்றுமை அரசின் வேட்பாளர் பெயர் இன்றிரவு 9.00 மணிக்கு அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூன் 12- சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான
ஒற்றுமை அரசின் வேட்பாளரின் பெயர் இன்றிரவு 9.00 மணிக்கு
அறிவிக்கப்படும் என்று அந்த கூட்டணியின் செயலாளர் அஷராப் வாஜ்டி
டுசுக்கி கூறினார்.

புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானாவில் நேற்று நடைபெற்ற பக்கத்தான்
ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் உயர்மட்டத் தலைவர்களின்
கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

இடைத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திரத்தின் பணிகளை
ஒருங்கிணைப்பதற்கும் ஒருமுகப்படுத்துவதற்கும் ஒற்றுமை
அரசாங்கத்தின் பிரதான தேர்தல் இயந்திரச் செயல்குழுவின் இணைத்
தலைவர்களாக ரபிஸி ரம்லியும் செனட்ட டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல்
காடீரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான பினாங்கு மாநில நிலையிலான
கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களாக டத்தோ முகமது அப்துல்
ஹமிட்டும் டத்தோ மூசா ஷேக் ஃபாட்சீரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
என்றார் அவர்.

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் வரும் ஜூலை 6ஆம் தேதி
நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் ஜூன்
22ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில் தொடக்கக் கட்ட வாக்களிப்பு
ஜூலை 2ஆம் தேதி நடைபெறும்.

வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் காரணமாகப் பாஸ் கட்சி சட்டமன்ற
உறுப்பினரான நோர் ஜாம்ரி லத்திப் கடந்த மே 24ஆம் தேதி
காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல்
நடைபெறுகிறது.


Pengarang :