NATIONAL

வெ.40 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்- ஐந்து ஆடவர்கள் கைது

ஷா ஆலம், ஜூன் 12- தென் கிள்ளான் மற்றும் சுபாங் ஜெயாவில் போதைப்
பொருள் கும்பலுக்கு எதிராக சிலாங்கூர் மாநில போலீசார் மேற்கொண்ட
அதிரடிச் சோதனைகளில் ஐந்து உள்நாட்டு ஆடவர்கள் கைது
செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 40 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான
மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இம்மாதம் 5ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் தென் கிள்ளானில்
மேற்கொள்ளப்பட்ட முதலாவது சோதனை நடவடிக்கையில் ஆடம்பர
குடியிருப்பு ஒன்றிலிருந்து 30 வயதுடைய உள்நாட்டு ஆடவர் கைது
செய்யப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார்
கான் கூறினார்.

கைதான நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக வீடமைப்பு
பகுதியில் இருந்த பல்நோக்கு வாகனம் ஒன்றைச் சோதனையிட்ட
போலீசார் அதிலிருந்து 41 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 36,409
கிராம் எக்ஸ்டசி, எர்மின் 5 போதை மாத்திரைகள் மற்றும் ஷாபு போதைப்
பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அவர் சொன்னார்.

அந்த சந்தேக நபர் இரு முந்தையக் குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது
விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறிய அவர், இந்த போதைப் பொருள்
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் விநியோகிக்கப்படவிருந்ததாகச்
சந்தேகிக்கப்படுகிறது என்றார்.

மற்றொரு போதைப் பொருளை கடத்தல் கும்பலை குறி வைத்து
நடத்தப்பட்டச் சோதனையில் நான்கு உள்நாட்டு ஆடவர்கள் கைது
செய்யப்பட்டதாக நேற்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில்
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 6ஆம் தேதி பிற்பகல் 1.50 மணி முதல் 2.10 மணி வரை சுபாங்
ஜெயா மற்றும் ரவாங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 30 முதல்
50 வயது வரையிலான அந்த நான்கு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்
என்றார் அவர்.

அக்கும்பல் வழங்கிய தகவலின் பேரில் சுபாங் ஜெயா வட்டாரத்திலுள்ள
பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் கான்வெஸ் பையில்
வைக்கப்பட்டிருந்த 600,000 வெள்ளி மதிப்பிலான 20,842 கிராம் போதைப்
பொருளை போலீசார் கைப்பற்றினர் என்று அவர் சொன்னார்.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் 1952ஆம் ஆண்டு
அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ்
விசாரணைக்காக எழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்
தெரிவித்தார்.


Pengarang :