NATIONAL

உணவில் நச்சுத்தன்மை- உணவு விநியோகிப்பாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விசாரணைக்கு அழைக்கப்படுவர்

ஷா ஆலம், ஜூன் 12- உணவில் நச்சுத் தன்மை காரணமாக இருவர்
பலியானச் சம்பவம் தொடர்பில் கோம்பாக்கிலுள்ள சமயப் பள்ளி ஒன்றில்
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், உணவு விநியோகிப்பாளர் உள்பட
சம்பந்தப்பட்டத் தரப்பினரை போலீசார் விரைவில் விசாரணைக்கு
அழைக்கவுள்ளனர்.

அந்த சமயப் பள்ளி ஆசிரியர்களும் இந்த விசாரணைக்கு உதவ
அழைக்கப்படுவார்கள் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ ஹுசேன் ஓமார் கான் கூறினார்.

நச்சுத் தன்மை கொண்ட உணவை அடையாளம் காண ஆய்வக
அறிக்கைக்காகக் காவல் துறையினர் காத்திருக்கின்றனர். தற்போதைக்கு
இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர்
சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடக்கக் கட்டத்தில் உள்ளதால்
எத்தனை பேர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை என்னால்
உறுதியாக க் கூற முடியாது. எனினும், அந்த நிகழ்வில்
விநியோகிக்கப்பட்ட உணவையே அவர்கள் அனைவரும்
உட்கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த பள்ளியிலுள்ள சிற்றுண்டிச் சாலையை சுகாதார அமைச்சு
மூடியுள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பில் இரு புகார்களும்
செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

கோம்பாக்கிலுள்ள சமயப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் ஏற்பட்ட
நச்சுத்தன்மை காரணமாக 17 வயது இளைஞரும் 2 வயது குழந்தையும்
உயிரிழந்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்
அரிபின் முகமது நாசீர் முன்னதாக கூறியிருந்தார்.

அந்த சமயப் பள்ளியிலிருந்து தாயார் கொண்டு வந்த உணவை
உட்கொண்ட அந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக
அவர் சொன்னார்.

அதே பள்ளியில் பாதுகாவலராகப் பணிபுரியும் ஆடவர் கடந்த சனிக்கிழமை
கொண்டு வந்த உணவை உட்கொண்ட இரண்டு வயது பெண் குழந்தை
காய்ச்சல், வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு 10.45
மணியளவில் உயிரிழந்தது.


Pengarang :