NATIONAL

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல்- ஒற்றுமை அரசின் வேட்பாளராகக் கல்வியாளர் ஜோஹாரி தேர்வு

நிபோங் திபால், ஜன 13 – எதிர்வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவிருக்கும்
சுங்கை பாக்காப் தொகுதி இடைத் தேர்தலுக்கான ஒற்றுமை
அரசாங்கத்தின் வேட்பாளராக அமினுடின் பாக்கி கல்லூரியின் (வட
பிராந்தியக் கிளை) முன்னாள் இயக்குநர் ஜோஹாரி அரிஃபின்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பி.கே.ஆர். கட்சியின் உறுப்பினரான அந்த 59 வயது வேட்பாளர்,
நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளதாக
ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதான தேர்தல் இயந்திர செயல்குழுவின்
இணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

எங்கள் வேட்பாளர் எங்களின் நிபந்தனைகளுக்கு மிகச் சரியாகப்
பொருந்துகிறார். முதலாவதாக அவர் உள்ளுர்வாசி என்பதோடு சுங்கை
பாக்காப் சமூகத்தின் தேவைகளை நன்று உணர்ந்திருக்கிறார்.

இரண்டாவதாக, அவர் தேவையான கல்வியையும் அறிவாற்றலையும்
பெற்றுள்ளார். மூன்றாவதாகப் பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்கும்
வாழ்க்கையை உயர்த்துவதற்கும் கடப்பாடு கொண்டுள்ளார் என்று
இங்குள்ள சிம்பாங் அம்பாட்டில் நேற்றிரவு வேட்பாளரை அறிமுகம் செய்து
வைத்து உரையாற்றுகையில் அவர் சொன்னார்.

இந்த நிகழ்வில் பினாங்கு பக்கத்தான் ஹராப்பான் தலைவர் சௌ கூன்
இயோ, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான்,
கெடா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ மஹாட்ஸிர் காலிட் அமானா
துணைத் தலைவர் முஜாஹிட் யூசுப், பினாங்கு மாநில பி.கே.ஆர்.
தலைமைத்துவ மன்றத் தலைவர் நுருள் இஸா அன்வார் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.

வேட்பாளராக களம் காணும் ஜோஹாரி கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய
அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி மேலாண்மை மற்றும் தலைமைத்துவத் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார். இதுதவிர அவர் கடந்த 1987ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பொருளதாரம் மற்றும் இஸ்லாமிய கல்வித் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிக்கிறார்.

கெடா மாநிலத்தின் செர்டாங் தேசியப் பள்ளி மற்றும் நிபோங் திபால் சமய
இடைநிலைப் பள்ளியில் உதவி ஆசிரியராக அவர் தனது கல்விப்
பணியைத் தொடக்கினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அமினுடின் பாக்கி கல்லூரியில் ( வட பிராந்தியக்
கிளை) இயக்குநராக பொறுப்பேற்ற ஜோஹாரி கடந்தாண்டு செப்டம்பர்
1ஆம் தேதி அரசுத் துறையிலிருந்து பணி ஓய்வு பெற்றார்.


Pengarang :