NATIONAL

1எம்டிபி முறைகேடு- மீட்கப்பட்ட 72.1 கோடி வெள்ளியை அமெரிக்கா மலேசியாவிடம் ஒப்படைத்தது

கோலாலம்பூர், ஜூன் 14 –1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1எம்டிபி) நிறுவனத்தின் சொத்து பறிமுதல் நடவடிக்கையின் வழி மீட்கபட்ட நிதியின் நான்காவது தவணைப் பணமான சுமார் 15.6 கோடி அமெரிக்க டாலரை (72 கவடியே 1.4 லட்சம் வெள்ளி) அமெரிக்க அரசாங்கம் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

கடந்த செவ்வாயன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்த மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் எட்கார்ட் டி. ககன்,  மலேசிய அரசாங்கம் சமர்ப்பித்த பணத்தைத் திரும்பப் பெறும் மனுவுக்கு அமெரிக்க நீதித்துறை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அந்த  நிதி திருப்பி அனுப்பப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த பரிமாற்றத்தின் மூலம் மலேசியாவிலிருந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிதியில் சுமார் 140 கோடி அமெரிக்க டாலரை (660 கோடி வெள்ளி )  மீட்டெடுப்பதற்கும் திரும்பப் பெறுவதற்கும் அமெரிக்கா உதவியுள்ளது.

நீதித்துறை விசாரணையின் வாயிலாக  நான்காவது தவணையாக இந்த சொத்துக்கள்  மீண்டும் மலேசியாவிற்கு மாற்றப்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த அசாதாரணத் தொகை மலேசியா மக்களுக்குச் சொந்தமான இடத்துக்கு மீண்டும் செல்கிறது.  உண்மையான நோக்கத்திற்காக –  மலேசியர்களின் அன்றாட   வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அந்த நிதியைப் பயன்படுத்த முடியும் என்று ககன் கூறினார்.

1எம்டிபி இல் உள்ள அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பிற சகாக்கள்  அடங்கிய கூட்டுச சதி திட்ட உறுப்பினர்கள் 1எம்டிபி நிதியில் 450 கோடி அமெரிக்க டாலருக்கு மேற்பட்டத் தொகையை  திசை மாற்றினர் என்று அறிக்கையில் ஒன்றில் அமெரிக்கத் தூதரகம்  கூறியது.

மோசடியான ஆவணங்கள் மற்றும் பிரதிநிதித்துவங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள வங்கிக் கணக்குகள் மூலம் தொடர்ச்சியான சிக்கலான பரிவர்த்தனைகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் சதிகாரர்கள் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

1எம்டிபியில் இருந்து திருடப்பட்ட  நிதியை மீட்டு மலேசியர்களுக்குப் பயனளிக்கும் வகையில் திரும்ப ஒப்படைப்பதற்கு  அமெரிக்க அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகத் தூதரகம் மேலும் கூறியது.


Pengarang :