NATIONAL

மூதாட்டியின் மரணம் கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டது

ஈப்போ, ஜூன் 14: கடந்த புதன்கிழமை தாமான் முஜுர் பெர்சாமில் உள்ள வீடொன்றில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் மரணம் கொலை வழக்காகக் காவல்துறையினர் வகைப்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட 60 வயது மூதாட்டியின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகளைத் தொடர்ந்து, தலை மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது என ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் கூறினார்.

ஜூன் 13 ஆம் தேதி காலை 9.15 மணி அளவில் பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் இங்குள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை (HRPB) வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“முதன் முதலில் திடீர் மரணத்தின் கீழ் நடத்தப்பட்ட வழக்கின் விசாரணை உள்நோக்கத்துடன் கொலை குற்றத்திற்காக மறு வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பொதுமக்களின் தகவலின் பேரில், பாதிக்கப்பட்டவரின் மகனான 36 வயதுடைய நபர் ஒருவர் மேல் விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஜூன் 14 வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருள் வழக்குகள் உட்பட 11 குற்றப் பதிவுகள் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக அபாங் சைனால் கூறினார்.

வழக்கு குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் வழக்கின் விசாரணை அதிகாரியான ஏஎஸ்பி ஃபட்லி அகமதுவிடம் 019-2500019 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலோ சாட்சி அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :