NATIONAL

வர்த்தகச் செயல்திறனை மேம்படுத்த சீனா-மலேசியா இடையே கூட்டுச் பணிக்குழு உருவாக்கம்

புத்ராஜெயா, ஜூன் 20 – ஒற்றைச் சாளர ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்கான சிறந்த வியூகங்களைக்  கண்டறிவதற்காகக் கூட்டுப் பணிக்குழுவை நிறுவ மலேசியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

தேசிய ஒற்றை சாளர (என்.எஸ் டபள்யூ.) திட்டத்தின் கீழ் நிதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று  அறிவித்தார்.

இந்த ஒற்றைச் சாளர ஒத்துழைப்பு எல்லை தாண்டிய வர்த்தக அனுமதியின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று நிதியமைச்சருமான  அன்வார் தெரிவித்தார்.

வர்த்தக ஒழுங்குமுறை செயல்பாடுகளை இலக்கவியல் மயமாக்குதல், தேவையற்ற ஆவணங்களை நீக்குதல் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் வர்த்தகப் பங்களிப்பாளர்களிடையே தடையற்ற மற்றும் துல்லியமான தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதல் ஆகிய நடைமுறைகள் மூலம் இது அடையப்படும் என்று அவர் சொன்னார்.

ஒற்றை சாளர ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான முயற்சிகள் மடாணி பொருளாதார கட்டமைப்பின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்றன. இது இலக்கவியல் மாற்றம் மற்றும் வணிகத்தை எளிதாக்குதல் ஆகியவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஒற்றைச் சாளர ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மலேசியாவின் நிதி அமைச்சு மற்றும் சீனாவின் சுங்க பொது நிர்வாகத்தின் கூட்டு அறிக்கையில் முறைப்படுத்தப்பட்டது.

இந்த அறிக்கையில் மலேசியாவின் இரண்டாம் நிதி அமைச்சர்  டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் மற்றும் சீனாவின் சுங்கத்துறை பொது நிர்வாக அமைச்சர் யூ ஜியான்ஹுவா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று பெர்டானா புத்ராவில் சீனப் பிரதமர் லீ கியாங்கிற்குப் பிரதமர் விருந்து வழங்கினார்.

முன்னதாக, இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கவும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் இரு தலைவர்களும்  தனிப்பட்டச் சந்திப்பை நடத்தினர்.


Pengarang :