NATIONAL

படகு கவிழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்த ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது

ஷா ஆலம், ஜூன் 27- கடந்த ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்த
சம்பவத்தில் உயிரிழந்த ஆடவரின் சடலம் கிள்ளான், பூலாவ் இண்டா
கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

முகமது பாஸில் பைஜான் (வயது 36) என்ற அந்த ஆடவரின் உடல் படகு
கவிழ்ந்த இடமான பூலாவ் இண்டா, பந்தாய் ஆச்சே கடல் பகுதியிலிருந்து
2.4 கடல் மைல் தொலைவில் நீரில் மிதக்கக் காணப்பட்டது என்று
சிலாங்கூர் மாநில கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் முகமது
முஹைமின் முகமது சாலே கூறினார்.

தேடுல் மற்றும் மீட்புக் குழுவில் இடம் பெற்றிருந்த தெலுக் நிப்பா மீனவர்
சங்க உறுப்பினர்களின் மீனவப் படகு அவ்வாடவரின் சடலத்தை நேற்று
பிற்பகல் 12.14 மணிளவில் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தது
என்று அவர் சொன்னார்.

அந்த ஆடவரின் சடலம் பூலாவ் இண்டா கடல் போலீஸ் படகுத்
துறைக்கு கொண்டு வரப்பட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம்
ஒப்படைக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இம்மாதம் 23ஆம் தேதி மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட
பேரலையில் படகொன்று சிக்கியதில் அதில் பயணம் செய்த மீனவர்களில்
ஒருவர் உயிர்த் தப்பிய வேளையில் மற்றொருவர் காணாமல் போனதாக
ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :