NATIONAL

ஷா ஆலம் விளையாட்டரங்கை இடிக்கும் பணி தொடங்கியது

ஷா ஆலம், ஜூன் 27- இம்மாதம் 14ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஷா ஆலம் விளையாட்டரங்கை உடைக்கும் பணி தொடங்கி விட்டதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் ஷா ஆலம் மாநகர் மன்றம், எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம், மலேசியன் ரிசோர்சஸ் கார்ப்ரேஷன் (எம்.ஆர்.சி.பி.) ஆகிய தரப்பினருக்கிடையே இம்மாதம் 20ஆம் தேதி சந்திப்பு நடைபெற்றதாக அவர் சொன்னார்.

திட்ட அங்கீகாரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வரைபடத்தை தயாரிப்பதற்கு முன்னர் தேவைகள் மற்றும் நிறைவேற்ற வேண்டிய நுட்ப நிபந்தனைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

இதுவரை நாங்கள் திட்ட வரைபடத்தை அதிகாரப்பூர்வமாகப் பெறவில்லை. எனினும், பழைய அரங்கை உடைப்பதற்கான அனுமதி கடந்த ஜூன் 14ஆம் தேதி வழங்கப்பட்டு அதனை இடிக்கும் பணிகள் தொடங்கி விட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம் விளையாட்டரங்கை உடைப்பதற்கான திட்டமிடல் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் அந்த சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது என்று அவர் மேலும் விளக்கினார்.

மாநில அரசின் அங்கீகாரத்திற்கேற்ப 44,000 முதல் 45,000 பேர் வரை அமரக்கூடிய புதிய அரங்கை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் பணியை எம்.பி.ஐ. தீவிரப்படுத்தியுள்ளது என அவர் சொன்னார்.

இருப்பினும், புதிய விளையாட்டு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர்
இரு விஷயங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முதலாவது விஷயம், மேம்பாட்டுப் பகுதிக்கு அருகில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ள நீர் சேகரிப்பு குளத்தை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பானதாகும்.

இரண்டாவது, சுற்று வட்டார மக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகும். இவ்விரு விஷயங்கள் குறித்து நாங்கள் மறுபடியும் பேச்சு நடத்தவிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :