NATIONAL

கேபிள்களைத் திருட முயன்ற நபர் 23வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்

கோலாலம்பூர், ஜூன் 27: காஜாங் உத்தாமவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேபிள்களைத் திருட முயன்ற இருவரில் ஒரு நபர் 23வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

காலை 8.20 மணிக்கு ஒரு பொது சாட்சியிடமிருந்து இச்சம்பவம் தொடர்பாக தனது தரப்பு புகாரைப் பெற்றது என காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் 31 மற்றும் 29 வயதுடைய இரு சந்தேக நபர்களும், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரி அவர்களின் நடவடிக்கைகளை கண்டுபிடித்த பின்னர் தப்பிக்க முயன்றதாக ஏசிபி நஸ்ரோன் கூறினார்.

“அதில் 29 வயதான சந்தேக நபர் கட்டிடத்தில் உள்ள மற்றொரு மாடிக்கு குதிக்க முயன்ற போது நான்காவது மாடியில் வழுக்கி விழுந்தார். பின்னர், துணை மருத்துவக் குழுவால் சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது மற்றும் வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டது.” என இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு சந்தேக நபர் ஆறு செப்பு கம்பிகள் கட்டுகள் மற்றும் கேபிள் கம்பிகளை வெட்டுவதற்கான சில உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டார் மற்றும் அந்நபருக்கு எட்டு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

“மேலும், சிறுநீர் பரிசோதனையின் முடிவில் அந்த சந்தேக நபர் மெத்தம்பேட்டமைன் எனும் போதைப்பொருளை உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் இறந்தவர் 10 முந்தைய குற்றப் பதிவுகள் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டது,” என்று ஏசிபி நஸ்ரோன் கூறினார்.

குற்றவியல் சட்டப் பிரிவு 431A மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952இன் பிரிவு 15(1) இன் கீழ் மேலும் விசாரணை மேற்கொள்ளப் படுகிறது.

மேலும் இது தொடர்பான தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அல்லது வழக்கின் விசாரணை அதிகாரி கே.சுரேஷை  017-4333795 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– பெர்னாமா


Pengarang :