NATIONAL

ஜூன் 10 வரை இ.பி.எஃப். நெகிழ்வு கணக்கிலிருந்து வெ.700 கோடி மீட்பு

கோலாலம்பூர், ஜூன் 27- ஐம்பத்தைந்து வயதுக்கும் கீழ்ப்பட்ட ஊழியர்
சேம நிதி சந்தாதாரர்களில் 34 லட்சத்து 50 ஆயிரம் பேர் அல்லது 26.6
விழுக்காட்டினர் இம்மாதம் 10ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில்
தங்கள் சேமிப்பிலிருந்து 1,086 கோடி வெள்ளியை செஜாத்ரா
கணக்கிலிருந்து (இரண்டாவது கணக்கு) நெகிழ்வு கணக்கிற்கு (மூன்றாவது
கணக்கு) மாற்றியுள்ளனர்.

அவர்களில் 29 லட்சத்து 30 ஆயிரம் பேர் நெகிழ்வு கணக்கில்
சேர்க்கப்பட்ட தொகையிலிருந்து சராசரி தலா 2,382 வெள்ளி வீதம்
மொத்தம் 698 கோடி வெள்ளியை மீட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று
வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் கூறப்பட்டது.

சேமிப்புக் கணக்கு மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இ.பி.எஃப். சந்தாதாரர்கள்
மீட்டுள்ள பணம் தொடர்பான தரவுகள் குறித்து பெக்கான் தொகுதி
உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷ் முகமது புஸி ஷ் அலி எழுப்பியக் கேள்விக்கு
நிதியமைச்சு இந்த பதிலை வழங்கியுள்ளது.

உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணம் தற்போதைய நிதி
கையிருப்பு, பங்களிப்பின் மூலம் பெறப்படும் நிகர ரொக்க பணப்புழக்கம்,
முதிர்வு மற்றும் முதலீட்டு வருமானம் மூலம் ஈடுகட்டப்படும் என்று
அமைச்சு தெரிவித்தது.

மேலும், 482 கோடி வெள்ளி உறுப்பினர்களின் ஓய்வு கால கணக்கிற்கு
மாற்றப்பட்டதன் வாயிலாக 39,000 உறுப்பினர்களின் அடிப்படை சேமிப்பு
240,000 வெள்ளியாக உயர்ந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டது.


Pengarang :