NATIONAL

மார்ச் 31 வரை 5,331 நிறுவனங்களுக்கு டிஜிட்டல் அந்தஸ்து- அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 28 – இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை  5,331 நிறுவனங்களுக்கு மலேசிய டிஜிட்டல் (எம்.டி.) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் அமைச்சு தெரிவித்தது. அவற்றில் 73 விழுக்காட்டிற்கும் அதிகமானவை உள்ளூர் நிறுவனங்களாகும்.

இந்த உள்ளூர் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பம், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், சைபர் செக்யூரிட்டி, நிதி தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மதிப்புள்ள டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சு கூறியது.

வளர்ச்சியை விரைவுபடுத்தவும், பொருளாதாரத்தில் கசிவு தாக்க விளைவுகளை அதிகரிக்கவும், நாட்டின் டிஜிட்டல் சுற்றுச்சூழலை வலுப்படுத்தவும் எம்.டி. அந்தஸ்து நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன என்று அது தெரிவித்தது.

மக்களவையில் நேற்று கிள்ளான் தொகுதி உறுப்பினர் வீ. கணபதிராவ் எழுப்பிய கேள்விக்கு வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் அமைச்சு இவ்வாறு கூறியது.

கடந்ந 2020 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில்  தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளூர் நிறுவனங்களின் பங்கேற்பு பற்றிய புள்ளிவிவரங்கள் மற்றும் அவற்றை அதிகரிப்பதற்கான  திட்டங்கள் குறித்து கணபதிராவ் கேள்வியெழுப்பியிருந்தார்.

“கேட்வே எம்ப்லிபை இன்வெஸ்ட் நர்ச்சர்” எனும் திட்டத்தின் வாயிலாக உலகளாவிய சந்தைகளில் ஊடுருவக்கூடிய உயர்தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உள்ளூர் நிறுவனங்களின் திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க டிஜிட்டல் அமைச்சு மலேசிய இலக்கவியல் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி, 300 நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்று மொத்த ஏற்றுமதியாக 1,126.5 கோடி வெள்ளியைப் பதிவு செய்துள்ளன என்று அது கூறியது.


Pengarang :