NATIONAL

பிளேக்ரோக் விவகாரத்தை பூதாகரமாக்கும் முயற்சிக்கு எதிராக அன்வார் எச்சரிக்கை

புத்ராஜெயா, ஜூலை 1- முதலீட்டு நிறுவனமான பிளேக்ரோக்
நிறுவனத்தை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தும் விவாதங்கள், வளர்ந்து
வரும் நாடு என்ற முறையில் மலேசியாவின் நலனை பெரிதும் பாதிக்கும்
என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து மிதமான வகையில் விவாதங்கள் நடத்தப்பட
வேண்டும் என வலியுறுத்திய அவர், ‘அதிகப்படியான‘ தன்மைக்கு எதிரான
எச்சரிக்கையும் விடுத்தார்.

இன்று இங்கு நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்று கூடும்
நிகழ்வில் உரையாற்றிய போது நிதியமைச்சருமான அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

அந்த பெரும் முதலீட்டு நிறுவனம் மலேசியாவில் நீண்ட காலமாக
இருந்து வந்த போதிலும் காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய
இராணுவம் புரிந்து வரும் அட்டூழியங்களை கண்டிக்கும் மலேசியாவின்
நிலைப்பாட்டிற்கு இதுவரை எந்த பாதிப்பும் வந்ததில்லை என்று அவர்
சொன்னார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் (மலேசியா) இஸ்ரேலுக்கு எதிராக
குரல் கொடுப்பதில் வெளிப்படையான போக்கை கடைபிடிக்கிறோம்.

ஆகவே, அதற்கு மேலும் கேட்டு வற்புறுத்தாதீர்கள். நாம் வளர்ந்து வரும்
நாடு. நமது ஆற்றலின் அளவை திரும்பிப் பாருங்கள். உங்கள்
பெருமையை தம்பட்டம் அடிப்பதற்காக நாட்டின் நலனுக்கு கீழறுப்பு
செய்து விடாதீர்கள். இதுதான் நமது பொதுவான கோட்பாடு என அவர்
தெரிவித்தார்.

பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் புரிந்து வரும் கொடுங்கோன்மை
மிகவும் வெளிப்படையான ஒன்று மைக்ரோசோப்ட், கூகுள் போன்ற
நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தால் நாம் அதனை எதிர்க்கலாம். அதே சமயம் அவர்களுடனான ஒத்துழைப்பிற்கான அனைத்து வழிகளையும் நாம் மூட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என அவர் கேள்வியெழுப்பினார்.

மலேசிய பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில்
பிளேக்ரோக் 2,470 கோடி வெள்ளி மதிப்பிலான பங்குகளை
வைத்துள்ளதோடு 790 கோடி வெள்ளி மதிப்புள்ள அரசாங்க மற்றும்
நிறுவன பங்குப் பத்திரங்களையும் கொண்டுள்ளதை தரவுகள்
காட்டுகின்றன.


Pengarang :