NATIONAL

நான்கு மாநிலங்களில் ஏழ்மையை அகற்றுவதில் அரசாங்கம் தீவிரம்- மக்களவையில் தகவல்

ஷா ஆலம், ஜூலை 1- தேசிய அளவைத் தாண்டி அதிக விழுக்காட்டு பரம
ஏழ்மை நிலையைக் கொண்டிருக்கும் நான்கு மாநிலங்கள் மீது அரசாங்கம்
பிரத்தியேகக் கவனம் செலுத்தி வருகிறது.

மிக வறிய நிலையின் அளவு சபா மாநிலத்தில் 1.2 விழுக்காடாகவும்
கிளந்தானில் 0.8 விழுக்காடாகவும், சரவாவில் 0.4 விழுக்காடாகவும்
கெடாவில் 0.3 விழுக்காடாகவும் உள்ளதாகத் துணை பொருளாதார
அமைச்சர் டத்தோஸ்ரீ ஹனிபா ஹஜார் தாயிப் கூறினார்.

ஒருங்கிணைந்த மேம்பாட்டு இலக்கிற்கேற்ப இனம், வட்டாரம் மற்றும்
மாநில என்ற ரீதியில் வேறுபாடு பார்க்காமல் பரம ஏழ்மைக்கு முற்றுப்
புள்ளி வைப்பதில் அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது என்று
அவர் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று பாசீர் மாஸ் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் அகமது பாட்லி ஷாரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்
துணையமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பரம ஏழ்மைக்கு முற்றுப் புள்ளி
வைப்பதில் மத்திய அரசு இலக்காகக் கொண்ட மாநிலங்கள் எவை என்று
அவர் அகமது பாட்லி கேள்வியெழுப்பியிருந்தார்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது,
பொருளாதார வாய்ப்புகளை அதிகப்படுத்துவது, மத்திய, மாநில
அரசுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு
முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று ஹனிபா சொன்னார்.

வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களை அமல்படுத்த பல்வேறு
அமைச்சுகள் மற்றும் அரசு துறைகளுக்கு அரசாங்கம் பெரிய தொகையை
மானியமாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் வருமானத்தை பெருக்குவதற்காக பொருளாதார அமைச்சின் கீழ்
மக்கள் வருமான முன்னெடுப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், நகர்ப்புற சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு அமல்படுத்தி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :