NATIONAL

ஜைன் ரய்யானுக்கு ஏற்பட்ட காயங்களைச் சித்தரிக்கும் படங்கள் அம்பலம்- போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஜூலை 1- சிறுவனான ஜைன் ரய்யான் உடலில் காணப்பட்டதாக நம்பப்படும் காயங்களைக் சித்தரிக்கும் கிராபிக் படங்கள் டெலிகிராம் செயலி மூலம் அம்பலமான விவகாரத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தகவல்களை கசிய விட்டதற்காக தண்டனைச் சட்டத்தின் 203ஏ பிரிவு,
1998ஆம் ஆண்டு தகவல் மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவு
மற்றும் 1972ஆம் ஆண்டு அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் 8வது பிரிவு
ஆகியவற்றின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு
வருவதாகச் சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹூசேன்
ஓமார் கான் கூறினார்.

விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் பிரசிகியூஷன் தரப்பின் பணிக்கு
இடையூறு ஏற்படும் என்பதால் 1972ஆம் ஆண்டு அதிகாரத்துவ இரகசியச்
சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை பகிரங்கப்படுத்த
வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த உள்ளடக்கங்களைப் பகிரும் தரப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அவர் பெர்னாமாவிடம் இன்று தெரிவித்தார்.

இதனிடையே, அந்த படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவது
தொடர்பில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று பிற்பகல் 2.15
மணியளவில் போலீசில் புகார் செய்ததாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி ஷாஹாருள்நிஸாம் ஜாபர் கூறினார்.

ஆட்டிஸம் குறைபாடு கொண்ட அந்தச் சிறுவனின் படுகொலை
தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே சமூக ஊடகங்களில்
அம்பலமாயின என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலிருந்து காணாமல் போன அச்சிறுவன் மறுநாள் அதாவது கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி இரவு 10.00 மணியளவில் இடாமான் டாமன்சாரா டாமாய் குடியிருப்புக்கு அருகில் நீரோடையோரம் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான்.


Pengarang :