NATIONAL

கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் போலீஸ் அதிகாரி ஜாமீன் கோரி மனு

ஈப்போ, ஜூலை 1 – சாலை விபத்தில்  17 வயது மாணவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் துறையைச் சேர்ந்த துணை சூப்பிண்டெண்டன் ஒருவர்  வழக்கின் விசாரணை முடியும் வரை  ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில்  விண்ணப்பித்துள்ளார்.

முகமது நஸ்ரி அப்துல் ரசாக் (வயது 44) என்ற அந்த அதிகாரி கடந்த மே 3ஆம் தேதி  உயர்நீதிமன்றத்தில் இந்த  மனுவைத் தாக்கல் செய்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 388வது பிரிவின் கீழ் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது என்று  அவரது வழக்கறிஞர் ஜேக்கி லோய் யாப் லூங் தெரிவித்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குச்சரன் சிங் ப்ரீட்டி முன்றிலையில் விசாரணைக்கு வந்தது.  இரு தரப்பினரும் தங்கள் வாதங்களைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக அவர் வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர்களான அப்சைனிசம் அப்துல் அஜீஸ், நஸ்ருல் ஹாடி அப்துல் கனி, கீதா ஜோரா சிங் மற்றும் லோ கின் ஹுய் ஆகியோர் ஆஜராகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட முகமது நஸ்ரி சார்பில்  வழக்குரைஞர்கள் லிம் சி சாவ் மற்றும் லிம் ஜின் வென் ஆகியோர் ஆஜராகும் வேளையில்  இறந்த மாணவரின் சார்பில் வழக்கறிஞர் யாஸ்மின் காலிட் வழக்கை கண்காணிக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி மதியம் 12.05 மணி முதல் 12.40 மணிக்குள் ஈப்போ, ஜாத்தி தேசிய பள்ளிக்கு  அருகில் உள்ள ஜாலான் தாமான் ஜாத்தி 1இல் 5ஆம் படிவ  மாணவரான முகமது ஜஹாரிப் அஃபெண்டி முகமது ஜம்ரியை கொலை செய்ததாக நஸ்ரி மீது குற்றம் சாட்டப்பட்டது.


Pengarang :