NATIONAL

நெடுஞ்சாலை ஊழல் தொடர்பில் மேலும் இருவரை எம்.ஏ.சி.சி. கைது செய்தது

கோலாலம்பூர், ஜூலை 3- கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை
தொடர்புடைய திட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 100 கோடி வெள்ளிக்கும்
மேற்பட்ட தொகை சம்பந்தப்பட்ட ஊழல் தொடர்பில் மேலும் இருவரை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரணைக்காகத் தடுத்து
வைத்துள்ளது.

ஒரு நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணை குத்தகை நிறுவனத்தின்
இயக்குநர் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர் என்று எம்.ஏ.சி.சி.
வட்டாரங்கள் கூறினர்.

நாற்பது மற்றும் 50 வயதுடைய அவ்விருவரையும் விசாரணைக்காக
தடுத்து வைப்பதற்கு எம்.ஏ.சி.சி. செய்து கொண்ட மனுவை மாஜிஸ்திரேட்
இர்ஸா ஜூலைக்காக ரோஹானுடின் ஏற்றுக் கொண்டார்.

டத்தோ அந்தஸ்து கொண்ட நிறுவனத் தலைவரை எதிர்வரும் ஜூலை 6ஆம்
தேதி சனிக்கிழமை வரையிலும் நிறுவன இயக்குநரை 4ஆம் தேதி
வரையிலும் தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று முன்தினம் இங்குள்ள எம்.ஏ.சி.சி.
தலைமையகம் வந்த போது அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக அந்த
ஊழல் தடுப்பு நிறுவன வட்டாரங்கள் கூறின.

வேறு நிறுவனம் மேற்கொண்டு வந்த கட்டுமானத் திட்டத்தை பெறுவதற்குப்
பிரதிபலனாக அரசு சார்பு நிறுவன அதிகாரிகளுக்கு 200,000 வெள்ளிக்கும்
அதிகமானத் தொகையை அவ்விருவரும் லஞ்சமாகக் கொடுத்ததாகக்
கூறப்படுகிறது.

இதே நோக்கத்திற்காக நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுக்கும்
அவர்கள் லஞ்சம் வழங்கியதாக நம்பப்படுகிறது என்று அந்த
வட்டாரங்களை மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய எம்.ஏ.சி.சி.
விசாரணைப் பிரிவின் முதன்மை இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின்
ஹஷிம், இந்த வழக்கு தொடர்பில் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின்
16(பி)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :