NATIONAL

யு.ஐ.டி.எம். வெள்ளி விழா சைக்கிளோட்ட நிகழ்வில் ராஜா மூடா பங்கேற்பு

ஷா ஆலம், ஜூலை 3- மாரா தொழில்நுட்பக் கல்லூரி பல்கலைக்கழகமாக
தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததையொட்டி
நடத்தப்பட்ட சைக்கிளோட்ட நிகழ்வில் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு
அமீர் கலந்து கொண்டார்.

மேன்மை தங்கிய ராஜா மூடா 12 சக சைக்கிளோட்ட வீரர்களுடன் புஞ்சா
ஆலம் யு.ஐ.டி.எம். வளாகத்திலிருந்து ஷா ஆலம் வளாகம் வரை
இப்பயணத்தை மேற்கொண்டார். இதன் வழி நாட்டின் அனைத்து
மாநிலங்களிலும் உள்ள யு.ஐ.டி.எம். வளாகங்களுக்குப் பங்கேற்பாளர்கள்
மேற்கொண்ட 2,000 கிலோ மீட்டர் சைக்கிளோட்டப் பயணம் முடிவுக்கு
வந்துள்ளது.

இப்பயணத்தின் போது அந்த சைக்கிளோட்டக் குழுவினர் ஒவ்வொரு
பல்கலைக்கழக வளாகமும் கொண்டிருக்கும் அபிலாஷைகள் மற்றும்
எதிர்பார்ப்புகளை ஏந்திய பெட்டகங்களை உடன் கொண்டு வந்தனர். அந்த
பெட்டகங்கள் பல்கலைக்கழகத்தின் நினைவார்த்த மையத்தில்
புதைக்கப்பட்டு எதிர்வரும் ஆகஸ்டு 24ஆம் தேதி நடைபெறும் யு.ஐ.டி.எம்.
விருந்து நிகழ்வின் போது திறக்கப்படும்.

இந்த சைக்கிளோட்ட நிகழ்வில் கலந்து கொண்ட ஒரே பெண்
பங்கேற்பாளராகப் பினாங்கு யு.ஐ.டி.எம். வளாகத்தின் பொறியில் துறையின்
மூத்த விரிவுரையாளரான நோர்லிஸான் வாஹிட் விளங்குகிறார்.

இந்த பயணத் திட்டத்திற்கு தாம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பெரிதும்
மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதாக அவர் சொன்னார். இந்த பயணம்
மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் சவால்மிக்கதாக இருந்தது
என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :