NATIONAL

கெந்திங்கில் சுற்றுலா பஸ் விபத்து- ஓட்டுனர் ஆனந்த் குமார் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ரவுப், ஜூலை 3 – கெந்திங் சாலை விபத்தில் சம்பந்த்தப்பட்ட ஓட்டுனருக்கு
எதிராக பேருந்தை ஆபத்தான முறையில் ஓட்டியது மற்றும் இரு சீன
சுற்றுப்பயணிகள் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தது ஆகிய
குற்றச்சாட்டுகள் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.

கிள்ளானைச் சேர்ந்த எஸ். ஆனந்த் குமார் (வயது 32) என்ற அந்த ஓடடுனர்
தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஜூன் 29ஆம் தேதி காலை 10.20 மணியளவில் பெந்தோங், ஜாலான்
கெந்திங் ஹைலண்ட்சின் 16.5வது கிலோ மீட்டரில் (இறங்கும் வழி) ஷாங்
பிங் (வயது 58) மற்றும் வாங் சுஹோங் (வயது 49) ஆகிய இருவரும்
உயிரிழப்பதற்குக் காரணமாக இருந்ததாக அவருக்கு எதிரான
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு முதல் பத்தாண்டு வரையிலான
சிறைத்தண்டனை மற்றும் 10,000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரை
அபராதம் விதிக்க வகை செய்யும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் அவ்வாடருக்கு எதிராக
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதே இடத்தில், அதே நேரத்தில் வாகனமோட்டும் லைசென்ஸ் இன்றி
சுற்றுலா பேருந்தை ஓட்டியதாக ஆனந்த் குமாருக்கு எதிரான முதலாவது
குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின்
2(1)வது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும்
பட்சத்தில் 300 வெள்ளி முதல் 2,000 வெள்ளி வரையிலான அபராதம்
மூன்று மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே
விதிக்க இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 8,000 வெள்ளி
ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட் சித்தி ஆயிஷா
அகமது, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 7ஆம்
தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :