NATIONAL

செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினரின் நிலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை

ஷா ஆலம், ஜூலை 3- செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷிட் அஸாரி
பெர்சத்து கட்சியிலிருந்து  நீக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் நிலை குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று சபாநாயகர் லாவ் வேங் சான் கூறினார்.

மாநில பெர்சத்து கட்சியின் தலைவர் அஸ்மின் அலி கடந்த மாதம் 21ஆம் தேதி அனுப்பிய ஆவணங்கள் மற்றும் அறிக்கையை தாம் ஆய்வு செய்து வருவதாக அவர் சொன்னார்.

தற்போதைக்கு அந்த ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு நிலையிலே உள்ளன. இவ்விவகாரத்தை சட்டமன்றத்திற்கு கொண்டு வருவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு அப்துல் ரஷிட் தனது ஆதரவைப் புலப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் பதவி வகித்து வரும் செலாட் கிள்ளான் தொகுதி காலியானதாக அறிவிக்கக் கோரி அஸ்மின் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

கட்சிக்கு தனது விசுவாசத்தைப் புலப்படுத்தக் கோரி பெர்சத்து கட்சியின் உச்சமன்றம் அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளிக்கத் தவறியதைத் தொடர்நது அவரின் உறுப்பியத்தை கட்சி மீட்டுக் கொண்டது.

மாநில சட்டமன்றக் கூட்டத்திற்கு தாம் நிச்சயம் வரப்போவதாகவும் அங்கு தனது நிலை குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அப்துல் ரஷிட் கடந்த மாதம் 26ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :