NATIONAL

இணைய மோசடி நடவடிக்கை மையத்திடம் உதவி கோரி 37,000 பேர் அழைப்பு- வெ.20 கோடி இழப்பு

கோலாலம்பூர், ஜூலை 4 – இவ்வாண்டு மே மாதம் வரை இணைய
மோசடியில் பாதிக்கப்பட்ட 37,000க்கும் அதிகமானோரிடமிருந்து தேசிய
இணைய மோசடி உதவி மையம் ( என்.எஸ்.ஆர்.சி.) அழைப்பைப்
பெற்றுள்ளது. இத்தகைய மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட
மொத்த இழப்பு 20 கோடியே 33 லட்சத்து 30 வெள்ளி என
மதிப்பிடப்படுகிறது.

இந்த மையம் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி
ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை பொது மக்களிடமிருந்து 95,094
புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.

இந்த மோசடி சம்பவங்கள் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை
10,649 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ள நிலையில் அவை
தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு
வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பில் 74 விசாரணை அறிக்கைகள்
திறக்கப்பட்டு 7 கோடியே 23 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 637
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன என்று நாடாளுமன்றத்தில் வழங்கிய
எழுத்துப்பூர்வ பதிலில் அவர் குறிப்பிட்டார்.

இணைய மோசடிகளைக் கையாள்வது மற்றும் அக்கும்பல்களின் மோசடி
யுக்தியை கண்டறிவதில் என்.எஸ்.ஆர்.சி.க்கு உள்ள ஆக்கத் திறன் குறித்து
கோல கிராய் பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் அப்துல் லத்திப் அப்துல்
ரஹ்மான் கேள்வியெழுப்பியிருந்தார்.

என்.எஸ்.ஆர்.சி.யும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையமும்
இணைந்து இணைய மோசடிப் பேர்வழிகளின் தொலைபேசி எண்களை
முடக்கியுள்ளதாக அன்வார் சொன்னார்.

மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கடந்த மே மாதம் 131
தொலைபேசி எண்கள் ரத்து செய்யப்பட்டதோடு மேலும் சந்தேகத்திற்குரிய
112 எண்கள் முடக்கப்பட்டன என்றார் அவர்.


Pengarang :