NATIONAL

சுங்கை பாக்காப் தொகுதியில் ஒற்றுமை அரசின் வேட்பாளர் வெற்றி பெறுவார்- ஐ.டி.இ. கணிப்பு

ஷா ஆலம், ஜூலை 4- சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் வேட்பாளர் 12,000 வாக்குகளுக்கும் அதிகம் பெற்று வெற்றி பெறுவார் என கணிக்கப்படுகிறது.

எனினும், அனைத்து இனங்களையும் சேர்ந்த 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினால் மட்டுமே ஒற்றுமை அரசின் வேட்பாளரான டாக்டர் ஜோஹாரி அரிபின் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்க முடியும் என்று டாருள் ஏஹ்சான் கழகம் (ஐ.டி.இ.) கூறியுள்ளது.

தாங்கள் மேற்கொண்ட மூன்று ஒப்பீட்டு உருவாக்கத்தில் சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் வாக்களிக்க வருவோரின் எண்ணிக்கை 60 முதல் 65 விழுக்காடு வரை இருக்கும் என கணிக்கப்படுவதாக ஐ.இ.டி.யின் நிர்வாகத் தலைவர் பேராசிரியர் டத்தோ பேராசிரியர் முகமது ரெட்சுவான் ஓத்மான் தெரிவித்தார்.

சுங்கை காண்டீஸ் போன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை எங்களின் கடந்த கால ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், சுங்கை பாக்காப் தொகுதியில் வாக்களிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார் அவர்.

இந்த இடைத் தேர்தலில் வாக்களிப்போரின் எண்ணிக்கை 60 முதல் 65 விழுக்காடாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த எண்ணிக்கை பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் 12,000 வாக்குகளில் அல்லது 2,403 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும். மேலும் 36 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களை கவரும் பட்சத்தில் ஹராப்பானுக்கு இந்த வெற்றி சாத்தியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சுங்கை பாக்காப் புறநகர் தொகுதியாக உள்ளது பெரிக்கத்தான் நேஷனலுக்குச் சாதகமாக உள்ளது. காரணம், அவர்களால் அனைத்து வாக்காளர்களையும் வாக்களிப்பு மையத்திற்குக் கொண்டு வர முடியும் என்று அவர் சொன்னார்.

இந்த இடைத் தேர்தல் தொடர்பான ஆய்வினை தாங்கள் கடந்த மாதம் 19 முதல் 22ஆம் தேதி வரை நடத்தியதாகக் கூறிய அவர், எட்டு வாக்களிப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 786 பேரிடம் நேரடியாகக் கருத்துகள் பெறப்பட்டன என்றார்.


Pengarang :