NATIONAL

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராகப் பாங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்

ஷா ஆலம், ஜூலை 4 – மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் சபாநாயகர் லாவ் வேங் சான் முன்னிலையில் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற கோல குபு பாரு இடைத் தேர்தலில் 31 வயதான பாங் வெற்றி பெற்றார். புற்று நோய் காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமான தொகுதியின் உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் இடத்தை பாங் நிரப்புகிறார்.

பதவியேற்புச் சடங்கிற்குக் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாங், தாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதோடு கோல குபு பாரு மக்களின் நலன் காக்க கடுமையாகப் பாடுபடப் போவதாகக் கூறினார்.

இந்த இடத்திற்கு வர முடிந்தது குறித்து நாம் பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் மக்களின் குரலை சட்டமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது செரண்டா மற்றும் உலு சிலாங்கூரில் தொழிலியல் மேம்பாடு, 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டிற்கான திட்டம், கோல குபு பாருவில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்பான விவகாரங்களை எழுப்புவேன் என்றார் அவர்.

கோல குபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல், பி.ஆர்.எம்.  மற்றும் சுயேட்சை வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.

இந்த தேர்தலில் பாங்கிற்கு 14,000 வாக்குகள் கிடைத்தன. பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளரை விட 3,869 வாக்குகள் அதிகமாகப் பெற்றார். இந்த தொகுதி கடந்த 13வது பொதுத் தேர்தல் முதல் ஜசெக வசம் இருந்து வருகிறது.


Pengarang :