SELANGOR

சுங்கை பத்தாங் காலி நீர் மின் நிலையம் அடுத்தாண்டு தொடக்கத்தில் பூர்த்தியாகும்

ஷா ஆலம், ஜூலை 9- உலு சிலாங்கூர், பத்தாங் காலி ஆற்றில் வோர்ல்ட்வைட் ஹைட்ரோ எனர்ஜி சென்.பெர்ஹாட் நிறுவனம் நிர்மாணித்து வரும் மினி நீர் மின் நிலையம் அடுத்தாண்டு முதல் காலாண்டில் பூர்த்தியாகும்.

முன்பு நிர்ணயிக்கப் பட்டதை விட ஓராண்டு முன்கூட்டியே தயாராகவிருக்கும் இந்த மின் நிலையத்தின் வழி சுற்றுவட்டார மக்கள் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இத்திட்டம் தற்போது 69 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள நிலையில் நிர்ணயிக்கப் பட்டதை விட ஓராண்டு முன்னதாக அதாவது வரும் 2025ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் இது முழுமை பெறும் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்தார்.

இந்த மின் நிலையம் பூர்த்தியானவுடன் இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் 5.1 மெகாவாட் மின்சாரம் உலுயாம் பிரதான துணை மின் நிலையத்திற்கு விநியோகிக்கப்படும். இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகத்தை வலுப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அந்த மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பகுதிக்கு வருகை மேற்கொண்ட இஷாம், அதன் மேம்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு எதுவாக புதிய எரிசக்தி துறைகளைக் கண்டறியும் முயற்சியில் தமது நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

சோலார் எனப்படும் சூரிய சக்தி மின் நிலையம், மினி நீர் மின் நிலையம் ஆகியவற்றோடு கழிவுகளிலிருந்து மின்சக்தியை உருவாக்கும் நிலையங்களும் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :