NATIONAL

பொது இடங்களில் சுற்றித் திரியும் கால் நடைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் இவ்வாண்டு இறுதி செய்யப்படும்

ஷா ஆலம், ஜூலை 10 – பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகள் தொடர்பான 1971ஆம் ஆண்டு மாடு எருமை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் திருத்த மசோதா இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும்.

சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை சீராகவும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கு ஏதுவாக மாடு எருமை வளர்ப்பு உரிமச் சட்ட ஷரத்துகள் தொடர்பான மசோதாவை தயாரிக்கும் பணியில் மாநில அரசு அதிகாரிகளுடன் சிலாங்கூர் மாநிலக் கால்நடைச் சேவைத் துறை ஈடுபட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

பொறுப்பற்ற கால்நடை வளர்ப்பாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 1,000 வெள்ளியிலிருந்து 10,000 வெள்ளியாக உயர்த்தும் நோக்கில் 1971ஆம் ஆண்டு மாடு எருமை கடப்பாட்டுச் சட்டத்தின் 5(1) பிரிவில் திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

மாநில சட்ட ஆலோசகர் அலுவலகத்தின் முடிவைப் பொறுத்து துணைச் சட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாக இறுதி செய்யப்படும் என அவர் மாநில சட்டமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.

அதன் பின்னர் இதில் சம்பந்தப்பட்ட தரப்பினரான சமூகத் தலைவர்கள், கால் நடை வளர்ப்போர் மற்றும் அரசு துறைகளுடன் ஆறு மாதக் காலத்திற்குக் கலந்துரையாடல் நடத்தப்பட்டு மாநிலம் முழுவதும் இச்சட்டம் அமலாக்கம் காணும் என்றார் அவர்.

பல்வேறு அம்சங்கள் மற்றும் இதில் தொடர்புடையத் தரப்பினரின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டப் பின்னர் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

மாடுகள் பேரங்காடிகள், மருத்துவமனைகள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிவது உடனடியாகத் தீர்வு காண வேண்டிய முக்கிய விவகாரமாகும். தற்போதுள்ள சட்டங்களின் கீழ லைசென்ஸ் வழங்குவதில் பலவீனங்கள் காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :