NATIONAL

இ.கே.வி.இ. நெடுஞ்சாலை 89 விழுக்காடு பூர்த்தி- அடுத்தாண்டு இறுதியில் முழுமையாக செயல்படும்

ஷா ஆலம், ஜூலை 10 – கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் 89.13 விழுக்காடு பூர்த்தி அடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 2025 டிசம்பர் 31ஆம் தேதி அந்த நெடுஞ்சாலை முழுமையாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முன்னதாகவே பூர்த்தியடையத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் எதிர்பாராதக் காரணங்களால் அதன் கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்டதாக அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அந்த நெடுஞ்சாலைத் திட்டம் இந்நேரம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எனினும், மேம்பாட்டாளர் சம்பந்தப்பட்ட உள்விவகாரங்கள் மற்றும் நிதி நெருக்கடியினால் இத்த்திட்டம் தாமதமடைந்து விட்டது. எனினும், அப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என அவர் சொன்னார்.

திட்டப் பணிகள் அடிக்கடி தாமதமடைவது மற்றும் கட்டுமானப் பணியின் காரணமாக பழுதடையும் சாலைகள் மற்றும் பாலங்களை மேம்பாட்டாளர்கள் சீரமைப்பதை உறுதி செய்ய மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து டுசுன் துவா உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தாமான் டேசா புடிமான் மற்றும் பண்டார் சுங்கை லோங்கில் உள்ள பால்ம் ட்வின் டனல் ஆகிய இடங்களில் சகதி வெள்ளம் ஏற்படக் காரணமாக இருந்ததற்காக இ.கே.வி.இ. மேம்பாட்டாளருக்கு எதிராக காஜாங் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கட்டுமானப் பகுதியை முறையாக பாதுகாக்கத் தவறியதன் மூலம் வெள்ளம் ஏற்படக்  காரணமாக இருந்ததற்காக 1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்த்தின் 71வது பிரிவின் கீழ் அந்த மேம்பாட்டாளருக்கு 250,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :