NATIONAL

2026 சுக்மா போட்டிக்கு புதிய அரங்கைப் பயன்படுத்த சிலாங்கூர் தயார்

ஷா ஆலம், ஜூலை 12-  எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் மலேசிய விளையாட்டுப்
போட்டிகளை (சுக்மா) சிலாங்கூர் ஏற்று நடத்தும் பட்சத்தில் ஷா ஆலம்
விளையாட்டுத் தொகுதியிலுள்ள வசதிகளைப் பயன்படுத்த சிலாங்கூர்
தயாராக உள்ளது.

அந்த அரங்கம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகப் பூர்த்தியடைந்தால்
அதன் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள தாங்கள் விரும்புவதாக மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உண்மையில், அந்த போட்டியை ஏற்று நடத்த சிலாங்கூருக்கு வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. அது கட்டாயமல்ல. அந்த விளையாட்டரங்கின்
மேம்பாடு முன்னதாக பூர்த்தியடையுமா என்பது அந்த போட்டியை
நடத்துவதற்கான அளவுகோலாக அமையும் என்று அவர் சொன்னார்.

அந்த விளையாட்டரங்கம் முன்கூட்டியே நிர்மாணிக்கப்பட்டால் நாங்கள்
நிச்சயமாக அப்போட்டியை ஏற்று நடத்துவோம். அதே சமயம்,
சிலாங்கூர் அவசரப்படவில்லை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.
அவ்வாறு செய்வது அழிவு அல்லது மோசமான விளைவுகளுக்கு வழி
வகுக்கும் என அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் மத்திய
தவணைக்கான மறுஆய்வு மீதான விவாததை முடித்து வைக்கும்
விவாதத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் திட்டமிடப்பட்ட 282 திட்டங்களில் 69
திட்டங்கள் 2025ஆம் ஆண்டு காலவரம்பைத் தாண்டி இரண்டாவது
சிலாங்கூர் திட்டத்தின் போது தொடரும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக
அமிருடின் சொன்னார்.

அந்த திட்டங்களில் கேரித் தீவுத் திட்டம், பல்நோக்கு மண்டபம்,
ஹோட்டல், கார் நிறுத்துமிடம், பொது போக்குவரத்து நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியும் அடங்கும் என்றார் அவர்.

முன்னதாக, முதலாவது சிலாங்கூர் திட்ட மத்திய தவணைக்கான
மறுஆய்வை தாக்கல் செய்து உரையாற்றிய மந்திரி புசார், அத்திட்டத்தில்
வரையறுக்கப்பட்ட திட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் முன்னெடுப்புகளில் 18
விழுக்காடு முழுமையாகப் பூர்த்தியடைந்துள்ள வேளையில் எஞ்சியத்
திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.


Pengarang :