NATIONAL

மக்களுக்கு வழங்கப்படும் ரோன் 95  உட்பட அனைத்து மானியங்கள், உதவிகள் மறுஆய்வு

கோலாலம்பூர், ஜூலை 12- ரோன் 95 பெட்ரோல் உட்பட மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் உதவிகளை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்வதோடு மறு மதிப்பீடு செய்து வருவதாகப் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரோன் 95 இலக்கு மானியத் திட்டம் சுமூகமாக இயங்கும் வகையிலும் மக்களுக்கான உதவி விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இதன் செயலாக்கம் அனைத்து அம்சங்களிலும் விரிவாக இருக்கும் என்று அமைச்சு  விளக்கியது.

ரோன் 95 பெட்ரோல் மீதான மானிய மறுசீரமைப்பை அமல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. எனினும், டீசல்  இலக்கு மானியத் திட்ட அமலாக்கம் சீர்பெறும் வரை அந்த எரிபொருளுக்கான  மானியத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும் என அது குறிப்பிட்டது.

இத்தகைய முன்னெடுப்புகள் மூலம்  நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும்  என்று நேற்று நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் உரிய பலன்களைப் பெறுவதற்கு செயல்படுத்தும் காலக்கெடு மற்றும் பொருத்தமான வழிமுறைகள் உட்பட ஒவ்வொரு அம்சமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காகப் பங்களிப்பாளர்களுடன் கலந்துரையாடல்  அமர்வுகள் நடத்தப்படும்.

பாடு எனப்படும் முதன்மை தரவு மைய முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயல்பாட்டுத் தேவைகளின் அடிப்படையில் பல்வேறு பரிந்துரைகள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.

மேலும்,  மானிய மறுபரிசீலனையை அரசாங்கம் அமல்படுத்தும் போது மக்கள், குறிப்பாக உதவி பெறுபவர்கள் பொருள் விலை அதிகரிப்பால் அதிக சுமைக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதிசெய்ய சமூக உதவி விநியோகமும் ஆய்வு செய்யப்படுகிறது என்று அது விளக்கியது.

பெட்ரோல் மற்றும் டீசல் மானிய மறுசீரமைப்பை  செயல்படுத்துவதற்கான காலக்கெடு, சம்பந்தப்பட்ட நிதி தாக்கங்கள் மற்றும் அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து பாகோ தொகுதி உறுப்பினர் டான்ஸ்ரீ மொகிடின் முகமது யாசின் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் பொருளாதார அமைச்சு இவ்வாறு கூறியது.


Pengarang :