SELANGOR

பலருக்கு கொலெஸ்ட்ரோல், சர்க்கரை அளவு அதிகம் இருப்பது சிலாங்கூர் சாரிங் சோதனையில் கண்டுபிடிப்பு

ஷா ஆலம், ஜூலை 17- இம்மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட சிலாங்கூர்
சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கங்களில் பெரும்பாலோர்
கொலேஸ்ட்ரோல் மற்றும் சர்க்கரை அளவை அதிகமாகக் கொண்டிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பரிசோதனையில் பங்கு கொண்ட 4,938 பேரில் ஏறக்குறைய பாதி
பேர் இத்தகைய பாதிப்புகளை கொண்டுள்ளதாகப் பொது சுகாகாரத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

தேர்வுக் கிளினிக்குகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனைகளின்
போது இரத்தத்தில் கொலேஸ்ட்ரோல் அளவும் சிறுநீரில் சர்க்கரை அளவும்
கொண்ட நோயாளிகள் அதிகளவில் உள்ளது தெரியவந்தது என்று அவர்
சொன்னார்.

இந்த குறைபாடுகள் நீரிழிவு நோய், சிறுநீரகப் பாதிப்பு மற்றும்
மாரடைப்புக்கு காரணமாக அமைகின்றன என்ற அவர் தெரிவித்தார்.

இந்த மருத்துவச் சோதனையின் முடிவுகள் செலங்கா செயலி வாயிலாக
சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அவர்கள்
தேர்வுக் கிளினிக்குகளில் தொடர் சோதனையை மேற்கொள்ள வேண்டும்
என்றார்.

இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்தப்படும் இந்த இலவச
பரிசோதனைத் திட்டத்தில் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சர்க்கரையின்
அளவு உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாண்டு மாநிலம் முழுவதும் இலவச மருத்துவப் பரிசோதனைகளை
மேற்கொள்ள 32 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.


Pengarang :