NATIONAL

வளர்ப்பு மகன் படுகொலை – ஆடவரின் மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலை நிறுத்தியது

ஜோகூர் பாரு, ஜூலை 17-  பதிமுன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 6 வயது வளர்ப்பு மகனைக் கொலை செய்ததற்காக ஆடவர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நாற்பத்தொன்பது  வயதான அஸ்மான் அப்துல்  ரஹ்மான் என்ற அவ்வாடவர்  மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு செய்த விண்ணப்பத்தை தலைமை நீதிபதி துன் தெங்கு   மைமுன் துவான் மாட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு  நிராகரிப்பதாக ஒருமனதாக முடிவெடுத்தது.

அஸ்மானுக்கு எதிரான மரண தண்டனையை ரத்து செய்வதற்கான மறுஆய்வு விண்ணப்பத்திற்கு எதிராக  அரசுத் தரப்பு முன்வைத்த  ஆட்சேபனையை  நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

குற்றம் சாட்டப்பட்டவரின் (அஸ்மான்) விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் தற்போதுள்ள தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ நோர்டின் ஹாசன் மற்றும் டத்தோ ஹனிபா ஃபரிகுல்லா ஆகியோருடன்  இந்த வழக்கை விசாரித்த தெங்கு மைமுன் கூறினார்.

முன்னதாக, மரண தண்டனைக்கு எதிரான  அஸ்மானின் மறுஆய்வு விண்ணப்பத்திற்கு   சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் விசாரணை மற்றும் மேல்முறையீட்டுப் பிரிவுத் தலைவர் டத்தோ முகமட் டுசுக்கி மொக்தார்  எதிர்ப்புத் தெரிவித்ததோடு  மரண தண்டனையை உறுதிப்படுத்துமாறு நீதிமன்றத்தைக்  கேட்டுக் கொண்டார். இவ்வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.விஜய் ரத்னம் ஆஜரானார்.

வழக்கறிஞர் விஜய் ரத்னம் தனது வாதத்தில் அஸ்மானுக்கு எதிரான
மரண தண்டனையை  மறுபரிசீலனை செய்யும்படி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். மேலும் தனது கட்சிக்காரர்  தாம் புர்ந்தச் செயலுக்கு மிகவும் வருந்துவதோடு தற்போது சமூக எதிர்ப்பு ஆளுமைக் கோளாறு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட ஹெபடைடிஸ் சி உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி   காலை 10.30 மணிக்கும் பிற்பகல்  2.15 மணிக்கும் இடையே மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள   கம்போங் சோலோக் பினாங் காடேக்,  செம்பனை தோட்டத்தில் ஆறு வயது முகமது பிர்டாவுஸ் முகமது டானைக் கொலை செய்த குற்றத்திற்காக அஸ்மானுக்கு  மலாக்கா உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.


Pengarang :