NATIONAL

இரு அணைக்கட்டுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியது

கோலாலம்பூர், ஜூலை 17 – கெடாவில் உள்ள மூடா அணை மற்றும் பேராக்கில் உள்ள புக்கிட் மேரா அணையில் உள்ள கச்சா நீரின் அளவு கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி முறையே 15.2 விழுக்காடு மற்றும் 19.54 விழுக்காடாகக் குறைந்து அபாயகர அளவை எட்டியுள்ளது.

மற்ற ஐந்து அணைகளில் நீர் மட்டம் 59.99 விழுக்காட்டிற்கு குறைந்து எச்சரிக்கை அளவில்
உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.

கெடா மாநிலத்திலுள்ள மாலுட் அணை (37.19 சதவீதம்), பெடு அணை (48.1 சதவீதம்),
பினாங்கின் தெலுக் பஹாங் அணை (35 சதவீதம்) மற்றும் ஆயர் ஹீத்தாம் அணை (51.3 சதவீதம்) ஆகிய ஐந்து அணைகளில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவில் உள்ள வேளையில்
பெர்லிஸின் திமா தாசோ அணையில் நீரின் அளவு 42.6 விழுக்காடாக உள்ளதாக அது
தெரிவித்தது.

அணைக்கட்டுகளில் 29.99 விழுக்காடு மற்றும் அதற்கும் குறைவான கச்சா நீர் இருப்பு
அபாயகர அளவாகவும் 30 சதவிகிதம் முதல் 59.99 சதவிகிதம் எச்சரிக்கை அளவாகவும் 60
சதவீதம் மற்றும் அதற்கு மேல் சாதாரண அளவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 10 முதல் 16 வரை பேராக்கின் தஞ்சங் மாலிம் மற்றும் திரெங்கானுவின் கம்போங் ராஜா பெசுட் ஆகிய இடங்களில் முறையே 137 மற்றும் 156 என்ற அளவில் காற்று மாசுக்
குறியீடு ஆரோக்கியமற்ற அளவைக் கொண்டிருந்தன.

வெப்ப வானிலை காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் குறித்து கருத்துரைத்த
நட்மா, கடந்த ஜூலை 9ஆம் தேதி 108 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
நேற்று 109 ஆக அதிகரித்துள்ளது எனக் கூறியது.

இதில் 25 வெப்ப பக்கவாதம், 77 வெப்ப சோர்வு மற்றும் ஏழு வெப்ப வலிப்பு சம்பவங்களும்
அடங்கும். வெப்பமான வானிலையுடன் தொடர்புடைய பெரும்பாலான சம்பவங்கள் கெடாவில் (19) பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து திரெங்கானு (17), ஜோகூர் (14), பகாங் (14), பேராக் (11), நெகிரி செம்பிலான் (9), சிலாங்கூர் (8) , சபா (7), கிளந்தான் (4), கோலாலம்பூர் (3), பெர்லிஸ் (2) மற்றும் பினாங்கு (1) ஆகிய மாநிலங்கள் உள்ளன. வெப்ப வாதத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உள்ளது.


Pengarang :