NATIONAL

இன்வெஸ்ட் சிலாங்கூர் மூலம் வெ.21.8 கோடி முதலீடு, 476,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கம்

ஷா ஆலம், ஜூலை 17- இன்வெஸ்ட் சிலாங்கூர் கடந்த 1999ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்டது முதல் மாநில அரசின் அந்த துணை நிறுவனம் மூலம்
476,886 வேலை வாய்ப்புகளை மறைமுகமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு
உற்பத்தி துறையில் 21 கோடியே 81 லட்சத்து 40 வெள்ளி முதலீடும்
பெறப்பட்டுள்ளது.

அக்காலக்கட்டத்தில் உற்பத்தி துறையில் 6,496 முதலீடுகளை அந்நிறுவனம்
ஈர்த்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது எக்ஸ்
தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறினார்.

மாநிலத்தின் பொருளாதார அடைவுநிலையை தொடர்ந்து தக்க வைத்துக்
கொள்ளப்போவதாக சூளுரைத்த அவர், அடுத்து வரும் ஆண்டுகளில்
தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50,000 கோடி வெள்ளி பங்களிப்பை
வழங்கும் இலக்கை மாநில அரசு அடையும் என்றும் தெரிவித்தார்.

இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் 25ஆண்டு வரலாறு அதன்
ஓய்வில்லாப் பயணத்தை பிரதிபலிக்கிறது. நாங்கள் ஓய்வு எடுக்க
மாட்டோம். மலேசியாவின் பொருளாதார உந்து சக்தியாக சிலாங்கூர்
தொடர்ந்து விளங்கும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் நாம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40,610
கோடி வெள்ளியை பதிவு செய்தோம். தேசிய வளர்ச்சி விகிதத்தை விட
இது அதிமானது. இருந்த போதிலும் நாங்கள் நிற்காமல் தொடர்ந்து
பயணிப்போம் என்றார் அவர்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தித் துறையின்
ஆற்றலைப் பெருக்குவது மற்றும் வருடாந்திர முதலீட்டை 1,200 கோடி
வெள்ளிக்கும் குறையாத வகையில் நிலை நிறுத்துவது ஆகிய
நடவடிக்கைகளின் வாயிலாக தென்கிழக்காசியா மற்றும் அதனையும் தாண்டி வியூக மையமாக சிலாங்கூர் உருவாக்கம் காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என அவர் சொன்னார்.

இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனம் கடந்த திங்கள்கிழமை தனது 25வது
வெள்ளி விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. இருப்பத்தைந்து
ஆண்டு கால அளப்பரிய பணியின் மூலம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு
நிறுவனங்கள் மாநிலத்தில் தங்கள் முதலீட்டுத் தளங்களை
நிறுவுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.


Pengarang :