NATIONAL

பான் போர்னியோ நெடுஞ்சாலையின் பராமரிப்புக்கு  ஆண்டுதோறும் வெ.3.2 கோடி ஒதுக்கீடு

கோலாலம்பூர், ஜூலை 17 – பான் போர்னியோ நெடுஞ்சாலை  திட்டம் முழுமையடைந்ததைத் தொடர்ந்து ஒப்படைப்பு அட்டவணையின்படி அந்நெடுஞ்சாலையின் வழக்கமான பராமரிப்புக்காக ஆண்டுதோறும் 3 கோடியே 28 லட்சம் வெள்ளி  ஒதுக்கப்படும்.

அனைத்து  வாகனமோட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக  சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த  ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக பொதுப் பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

வழக்கமான பராமரிப்பு,  நடைபாதை பணி, நடைபாதை அல்லாத காலமுறை பணி  மற்றும் அவசரகால பழுது உள்ளிட்ட பராமரிப்புகளை செய்ய தனியார்மயமாக்கல் ஒப்பந்தத்தின் மூலம் அமைச்சு  ஒப்பந்ததாரரை நியமிக்கும் என்று அவர் சொன்னார்.

வழக்கமான பராமரிப்பின் கீழ் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் வாரத்திற்கு இரண்டு முறை கூட்டரசு சாலைகளில் வழக்கமான ஆய்வுப் பணிகளை  மேற்கொள்வார்.

குழிகள் போன்ற எந்தவொரு சாலை சேதத்தையும் உடனடியாக நிவர்த்தி செய்வதை இது நோக்கமாக கொண்டதாகும்.  நாடு முழுவதும் உள்ள கூட்டரசு சாலைகளில் குழிகள் இல்லாதிருப்பதை உறுதி செய்யும் பொதுப்பணி இலாகாவின்   கொள்கையின்படி 24 மணி நேரத்திற்குள் குழிகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் மக்களவையில் கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

பொதுப்பணி அமைச்சின் நீண்ட கால நெடுஞ்சாலை மேலாண்மைத் திட்டம், மேற்கொள்ள  வேண்டிய சாலைப் பராமரிப்பு பணிகள் மற்றும் பான் போர்னியோ நெடுஞ்சாலையைப் பராமரிப்பதற்கான நிதி ஆகியவை குறித்து சராத்தோக் தொகுதி பாரிசான் உறுப்பினர் டத்தோ அலி பிஜூ எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.


Pengarang :