NATIONAL

மாமன்னரின் அரியணை அமரும் நிகழ்வையொட்டி மரியாதை குண்டு முழக்கம், கண்காட்சிக்கு ஏற்பாடு

கோலாலம்பூர், ஜூலை 17-  எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்
தலைநகர் ஜாலான் சுல்தான் அப்துல் ஹலிம் சாலை வழியாக
பயணிப்பவர்கள் வெடிகுண்டு முழக்கம் கேட்டு பீதியடைய வேண்டாம் என
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுல்தான் இப்ராஹிம் நாட்டின் 17வது பேரரசராகப் பதவியேற்கும் சடங்கை
முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறும்
முழு அளவிலான ஒத்திகையின் போது பீரங்கியிலிருந்து இரு முறை
குண்டு முழக்கம் எழுப்பப்படும் என்று பிரதமர் துறையின் வர்த்தகத்
தொடர்புத் துறையின் தலைவர் முகமது பாட்ஸ் சனுசி கூறினார்.

மாமன்னர் அரியணை அமரும் நிகழ்வு நடைபெறும் தினமான
சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு 21 முறை மரியாதை குண்டு முழக்கம்
எழுப்பப்படும். ஆகவே, அச்சமயம் வெடி குண்டுச் சத்தம் கேட்பவர்கள்
பீதியடைய வேண்டாம் என்று பெர்னாமா டிவியில் இன்று ஒளிபரப்பான
நிகழ்வில் அவர் தெரிவித்தார்.

பதினேழாவது மாமன்னரின் பதவியேற்பு விழா நாளை மாலை 5.30
மணிக்கு தேசிய பள்ளிவாசலில் யாசின் வாசிப்பு மற்றும் துவா ஓதும்
நிகழ்வுடன் தொடங்கும் என்று அவர் சொன்னார்.

சுல்தான் இப்ராஹிமின் பதவியேற்புச் சடங்கில் கலந்து கொள்ளவிருக்கும்
பிரமுகர்களில் புருணை சுல்தான் ஹஸானால் போல்கியா மற்றும்
பாஹ்ரின் மன்னர் ஷேக் ஹாமாட் பின் இசா அல்-கலிபா ஆகியோரும்
அடங்குவர்.

இந்த அரியணை அமரும் நிகழ்வை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை
இஸ்தானா நெகாராவில் அரச விருந்து நடைபெறும். இந்நிகழ்வின் ஒரு
பகுதியாக பேரரசியார் ராஜா ஜரித் சோபியா எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி
கோம்பாக் பூர்வக்குடியினர் மருத்துவமனைக்கு வருகை புரிவார்.

இந்த வைபவத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜூலை 25ஆம் தேதி இங்குள்ள
தேசிய அருங்காட்சியகத்தில் ராஜா கித்தா எனும் கண்காட்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. மறுநாள் தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி வரை
பொது மக்கள் அந்த கண்காட்சியைக் காணலாம். இந்த கண்காட்சியில் 130
அரச சேகரிப்புகளான அரியப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படும்.


Pengarang :