NATIONAL

நூர் ஃபாரா படுகொலை- 26 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

உலு சிலாங்கூர், ஜூலை 18- சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி
பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) முன்னாள் மாணவியான நூர் ஃபாரா
கார்தினியின் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உதவ 26
சாட்சிகளிடம் காவல் துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் மறைந்த நூர் ஃபாராவின்
சகாக்கள், சந்தேகப் பேர்வழியின் சகப் பணியாளர்கள் மற்றும் பொது
மக்களும் அடங்குவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மட்டுமே
தற்போதைக்கு ஒரே பிரதான குற்றவாளியாகக் கருதப்படுகிறார் என்று அவர்
குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள கம்போங் ஸ்ரீ கிளேடாங், செம்பனைத் தோட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட வழக்கின் ஆதாரப் பொருள்களைத் தேடும் பணியை
பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

வழக்கின் ஆதாரங்களைத் தேடும் நடவடிக்கையில் அரச மலேசிய
போலீஸ் படையின் சப் அக்குவாட்டிக் தடயவியல் பிரிவு, மோப்ப நாய்
பிரிவு (டி9), சி.எஸ்.ஐ. தடயவியல் பிரிவு ஆகியவை ஈடுபட்டதாகக் கூறிய
அவர், கொலையுண்ட பெண்ணுக்குச் சொந்தமானது என நம்பப்படும்
கைப்பேசி ஒன்று அங்குள்ள கால்வாயிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது
என்றார்.

இந்த கொலைக்கான நோக்கம் குறித்து வினவப்பட்ட போது, ஏற்கனவே
நான் கூறியது போல் இறந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையே
ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது. எனினும், கொலைக்கான
உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கு முன்னர் அவர்களுக்கிடையே
எந்த மாதிரியான உறவு இருந்தது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்
என்றார் அவர்.

சரவா மாநிலத்தின் மிரியைச் சேர்ந்வரான நூர் ஃபாரா கடந்த புதன்கிழமை
வாடிக்கையாளரிடம் வாடகைக் காரை ஒப்படைக்கச் சென்ற போது
காணாமல் போனார்.


Pengarang :