NATIONAL

எம்.எச்.17 பேரிடர்- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை- டச்சு பிரதமர் கோரிக்கை

விஜ்ஹூய்சென், ஜூலை 18 – பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியன்
ஏர்லைன்ஸ் எம்.எச்.17 விமானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்
பலியான 298 பேருக்கு நீதி கிடைக்க அனைத்துலக ஒத்துழைப்பு மிகவும்
தேவை என்று நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப் கூறினார்.

இவ்விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு நிற்பது அவசியம்.
கூட்டு விசாரணைக் குழு இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய
தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் விசாரணையை மறுபடியும்
தொடங்குவார்கள். ஆகவே, இதில் அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்பு
மிக மிக அவசியமாகத் தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.

நெதர்லாந்தின் விஜ்ஹூய்சென் பூங்காவில் உள்ள எம்.எச்.17 தேசிய
நினைவு மையத்தில் நேற்று நடைபெற்ற அந்த விமானப் பேரிடரின்
பத்தாம் ஆண்டு நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நிச்சயம் ஒரு நாள் நீதி கிடைக்கும் என்பதால் ஒருபோதும் மனந்தளர
வேண்டாம் என இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை
கேட்டுக் கொள்வீர்களா என நிருபர்கள் வினவிய போது, அவர்கள் நிச்சயம்
நம்பிக்கையை கைவிடக் கூடாது. நாங்கள் அதற்காகப் போராடுவோம்.
ஆனாலும் எந்த உத்தராவதமும் கிடையாது என்றார் அவர்.

எம்.எச்.17 விமானப் பேரிடரின் தாக்கம் நெதர்லாந்தில் இன்னும் ஆழமாகப்
பதிந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் இச்சம்பவம் நிகழ்ந்தப் பின்னர்
உயிரிழந்தவர்களை தாங்கிய சவப்பெட்டிகள் நெதர்லாந்தின் விமானத்
தளம் வந்தடைந்த போது பெரும் கூட்டம் அங்கு திரண்டிருந்தது. ஒட்டு
மொத்த நாடு துக்கம் அனுசரித்தது. பத்தாண்டுகளுக்குப் பின்னரும் அந்த
நிகழ்வின் நினைவுகள் இன்னும் உள்ளன என அவர் கூறினார்.

எம்.எச்.17 பேரிடரின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக
டச்சு மன்னர் வில்லியம் அலெக்சாண்டரோடு உலகம் முழுவதும் இருந்து
சுமார் 1,500 பேர் இந்த நினைவார்த்த மையத்தில் திரண்டிருந்தனர்.

அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது அதனைச் செலுத்திக்
கொண்டிருந்த விமானியான எக்னி சூவின் மகன் ஸ்கோட் சூட் உயிரிழந்த
பயணிகளின் பெயர்களை வரிசையாக வாசித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நெதர்லாந்தின்
ஆம்ஸ்ர்டாமிலிருருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அந்த
விமானம் கிழக்கு உக்ரேனுக்கு உயரே சுட்டு வீழ்த்தப்பட்டது.


Pengarang :