NATIONAL

தின்பண்டத்தில் விஷம்- தோட்ட உரிமையாளர் போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு

கூலிம், ஜூலை 18 – விஷம் தடவப்பட்ட கெரொப்போக் தின்பண்டத்தை
உட்கொண்டதால் இரு சிறார்கள் மரணமடைந்தது தொடர்பான
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட 33 வயது ஆடவர் நேற்று போலீஸ்
ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிறு தோட்டக்காரரான அந்த நபர் கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது அஜிசுல் முகமது கைரி கூறினார்.

அந்த ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிக்கப்படவில்லை
என்பதால் சட்டத் துறை துணைத் தலைவரின் முடிவு கிடைக்கும் வரை
போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அவர் சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முழுமை பெற்று விசாரணை
அறிக்கை சட்டத் துறைத் துணைத் தலைவர் அலுவலகத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
கூறினார்.

விஷம் தடவப்பட்ட கெரோப்போக் தின்பண்டத்தை உட்கொண்டதால்
முகமது அக்கில் ஷியாக்கி சுஃப்யான் (வயது 3) மற்றும் அவனது
தம்பியான முகமது லுத் ஷியாக்கி (வயது 2) ஆகிய இருவரும்
உயிரிழந்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

இச்சம்பவம் இம்மாதம் 7ஆம் தேதி கூலிம் லாபு பெசார், கம்போங்
பாட்டாங் உபியிலுள்ள தோட்டம் ஒன்றில் நிகழ்ந்தது. பயிர்களை நாசம்
செய்யும் குரங்குகளை பிடிப்பதற்காக தோட்ட உரிமையாளர் வேலியின்
மீது விஷம் தடவப்பட்ட கெரோப்போக் பண்டத்தை வைத்ததாகக்
கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் சிறார்களின் பாதுகாப்பை புறக்கணித்த தற்காக
611வது சட்டத்தின் 31(1)(ஏ) மற்றும் தண்டனைச் சட்டத்தின் 284வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Pengarang :